ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக் பிராந்தியத்திற்கு பாப்பரசர் விஜயம் | தினகரன்

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக் பிராந்தியத்திற்கு பாப்பரசர் விஜயம்

ஈராக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாப்பரசர் பிரான்சிஸ் தனது பயணத்தின் மூன்றாவது நாளான நேற்று இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் வட பகுதிக்கு சென்றார்.

2014 இல் இந்தப் பிராந்தியத்தை கைப்பற்றிய ஐ.எஸ் குழு கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரை இலக்கு வைத்து செயற்பட்டது. 2017இல் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவர்கள் தமது சொந்த நிலத்திற்கு திரும்பியுள்ளனர்.

நேற்று பின்னேரம் இர்பிலில் உள்ள கால்பந்து அரங்கு ஒன்றில் பாப்பரசர் ஆராதனையில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

எனினும் இந்த வழிபாட்டு நிகழ்வில் கொரோனா தொற்று ஆபத்து பற்றியும் அச்சம் இருந்தது.

ஈராக்கில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் பாப்பரசர் தமது கவலையை வெளிப்படுத்தி இருந்தார். ஈராக்கில் கடந்த வாரமே முதல் கட்ட தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமையே நான்கு நாள் விஜயமாக பாப்பரசர் ஈராக்கை சென்றடைந்தார். கடந்த ஆண்டு ஆரம்பமான கொரோனா தொற்றுக்கு பின்னர் பாப்பரசர் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபடுவது இது முதல் முறை என்பதோடு பாப்பரசர் ஒருவர் ஈராக் சென்றிருப்பது வரலாற்றில் இது முதல் முறையாகும்.

எனினும் இந்த விஜயம் மேற்குலகத் தலையீடாக இருப்பதாகக் கூறு சில ஷியா முஸ்லிம் போராட்டக் குழுக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றுக் காலை வடக்கு நகரான இர்பில்லை சென்றடைந்த பாப்பரசரை ஈராக்கிய குர்திஷ் பிராந்திய தலைவர் நெசிர்வான் பர்சானி வரவேற்றார்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ் கோட்டையாக இருந்த மொசூல் நகருக்கு பாப்பரசர் செல்லவிருந்தார். இதன்போது ஐ.எஸ் உடனான போரில் கொல்லப்பட்டவர்களுக்காக அவர் தேவாலய சதுக்கத்தில் பிரார்த்தனை நடத்தவிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாப்பரசர் கரகோசில் இருக்கும் ஈராக்கின் மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்லவிருந்தார். ஐ.எஸ் குழுவினர் இந்த தேவாலயத்தை பகுதி அளவு அழித்துள்ளனர். அந்தக் குழு தோற்கடிக்கப்பட்ட பின் கிறிஸ்தவர்கள் இந்தப் பகுதிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இந்தப் பயணத்தில் பாப்பரசரின் பாதுகாப்பிற்கு சுமார் 10,000 ஈராக் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...