மதுவுக்கு அடிமையான கணவனால் இருண்ட வாழ்வுக்குள் பெண்கள்! | தினகரன்

மதுவுக்கு அடிமையான கணவனால் இருண்ட வாழ்வுக்குள் பெண்கள்!

மது பாவனையில் ஈடுபடுகின்ற ஒரு ஆணை திருமணம் செய்யும்  பெண்ணின் நிம்மதியே பறிபோய் விடுகின்றது. மதுபானம் அருந்தும் ஆணிடம் அந்தரங்கம் உட்பட ஒவ்வொரு விடயத்தையும் மனைவி அசௌகரியமாகவே பகிர்ந்து கொள்கின்றாள்.  மதுபானம் அருந்தும் கணவனுடன் குடும்பம் நடத்தும் அநேகமான பெண்கள் சுதந்திரமின்றி, நிம்மதியற்ற வாழ்க்கையையே வாழ்கின்றனர். 

ஆண்களில் ஏராளமானோர் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை மதுசாரம் அருந்துவதற்காக செலவழிக்கின்றனர். ஆண்களின் குடிப்பழக்கமானது பெண்களை கஷ்டத்தில் ஆழ்த்தி, குடும்ப பாரங்களை பெண்கள் மீது சுமத்துகின்றது. ஆண்கள் பலர் மதுபானத்துக்காக பெருந்தொகையான பணத்தை விரயமாக்குகின்றனர். இதனால் பெண்களின் நிம்மதி குலைகின்றது.

ஆனால் மனைவியானவள் இவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு வீட்டு பொருளாதாரத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. உணவுத் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் கல்வியைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குத் தேவையான உடைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். பண்டிகைகள் வந்தால் தனது குடும்பமும் ஏதோ ஒரு வகையில் அதனை கொண்டாட வேண்டும் என்று பணத்தை சிறுக சிறுக சேமித்து சமாளிக்க வேண்டும். பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் ஆகியன மீறப்படும் பிரதான சந்தர்ப்பமே இதுவாகும்.

மதுபானம் அருந்தும் ஆண்கள் பலர் தனது பொறுப்புக்களில் இருந்து விலகி நிற்பதற்காகவே அவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். மது அருந்தி விட்டு போலியாக நடித்து பெண்களை துன்புறுத்துகின்றனர். சண்டைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே பெண்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். சரியான பிரதிபலிப்புகளை வழங்க வேண்டும்.

 மது அருந்தி விட்டு வரும் ஆண்களை விஷேடமாக கவனிப்பது, அவ்வாறான நேரங்களில் பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை அவர்களிடம் கூறாமல் இருப்பது போன்றன பெண்களால் குடிப்போருக்கு வழங்கப்படும் சலுகைகளாகும். அவ்வாறான சலுகைகளை வழங்குமிடத்து குடிக்கும் சில ஆண்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் பெண்களுக்கு மனஅழுத்தங்களையும், கஷ்டங்களையும் விளைவிக்கின்றனர்.   குடிப்பவர்களில் பலர் நடிக்கிறார்கள் என்ற விடயத்தை நாம் அறிந்துள்ளோம். பின்வரும் விடயங்களை அவதானித்தால் மேலும் அதனை உறுதி செய்து கொள்ள முடியும்.

மது அருந்தியதும் பலர் அப்பாவித்தனமுடைய ஒருவரிடம் சண்டை போடுகிறார். ஆனால் பலசாலியிடம் அடங்குகிறார்.

மனைவியிடம் சண்டை போடுகிறார். மனைவியின் அண்ணனோ, தம்பியோ வந்தால் அமைதியாக நடந்து கொள்கிறார். கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் குடித்திருப்பதை இனங்காட்ட முயற்சிக்கிறார். ஆனால் பொலிஸ்காரரைக் கண்டால் குடிக்காதவரைப் போன்று நடிக்க முயற்சிக்கின்றார்.

குடிப்பவர்கள் இவ்வாறு நடிப்பதை பெண்கள் அறியாத காரணத்தினாலேயே அதிகமாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. சமூகம் குடிப்பவர்களின் நடிப்புகளுக்கு ஏமாந்து பல்வேறு விதத்தில் சலுகைகள் வழங்குகின்றது. குறிப்பாகப் பெண்கள் அதிகமாக சலுகைகள் கொடுப்பதனாலேயே அவர்கள் மேலும் மேலும் மது அருந்துகின்றார்கள்.

மது அருந்துபவர்கள் தங்கள் சுய இலாபங்களுக்காகவே நடத்தையை மாற்றிக் கொள்கிறார்கள் என்ற விடயத்தை பெண்கள் ஏனையவர்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம்.  குடித்து விட்டு வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களே சமூகத்தில் உள்ள பலவீனமானவர்கள் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவது அவசியம். அவர்களை நகைப்பிற்கு உட்படுத்துவோம்.  பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களாவர். ஆண்கள் கொடுக்கும் அனைத்து கஷ்டங்களையும் பெண்கள் ஏற்றுக் கொள்வதை விடுத்து, அவ்வாறான ஆண்களையும் நல்வழிக்கு இட்டுச் செல்லக் கூடிய வல்லமையை பெண்கள் பெற வேண்டும். மதுபோதைக்கு அடிமையான ஆண்களின் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பெண்கள் வலுவடைய வேண்டும். கணவன் மதுசாரம் அருந்துவதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் பெண்கள் சகித்துக் கொண்டு வாழப் பழகாமல், அதற்கு சரியான நேரத்தில் தகுந்த பிரதிபலிப்புகளையும் வழங்க வேண்டும். அவ்வாறு ஆரம்பிக்குமிடத்து பிரச்சினைகளின் விளைவுகளும், பிரச்சினைகளின் அளவும் குறைவடையும் என்பதில் ஐயமில்லை.

நிதர்ஷனா செல்லதுரை
(நிகழ்ச்சி அதிகாரி)
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்


Add new comment

Or log in with...