மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாக பரவும் டெங்கு!

பொதுமக்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குவது அவசியம். வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும். இதற்குத் தேவையான ஆளணியை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் மற்றும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் அமர்த்தப்பட்டவர்களில் இருந்து உருவாக்க வேண்டும். இவர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு மாவட்ட டெங்கு தடுப்பு செயலணியுடன் கைகோர்த்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மாட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மாவட்டத்தின் 14பிரதேச செயலகப் பிரிவுகளில் 07பிரதேச பிரிவுகளில்  டெங்கு நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது.

சுகாதார வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் ஆகியோரின் இணைந்த செயற்பாட்டின் மூலமாகவே டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாவட்ட டெங்கு தடுப்பு செயலணியினால் அங்கு எடுத்துக் கூறப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளது. வாழைச்சேனை, காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம் ஆகிய பகுதிகளில் அதிக நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளார்கள். கடந்த மாதம் (பெப்ரவரி) 19ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 26ஆம் திகதி வரையுமான காலப் பகுதியில் 142பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளார்கள்.

இந்த வாரம் மண்முனை வடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 33நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29பேரும் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08பேரும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05பேரும், ஏறாவூர் நகர், வாகரை,பட்டிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 03பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01நோயாளருமாக மொத்தம் 142பேர் டெங்கு இனங் காணப்பட்டுள்ளனர்.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயினால் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுவரை மரண எண்ணிக்கை 2ஆகவும்,டெங்கு நோயாளர்கள் 2055ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகளை அகற்றி, நீர் தங்கியுள்ள இடங்களை   டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. 12வயதிற்கு குறைந்த சிறுவர்கள் 40வீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது இதன் போது சுட்டிக் காட்டப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு நகரப் பகுதி, ஓட்டமாவடி மத்தி, காத்தான்குடி, கோரளைப்பற்று, ஏறாவூர் நகர், ஒட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசங்களிலே அதிகளவான டெங்கு நோயாளர்கள்  பதிவாகி வருகின்றனர். கடந்த மாதங்களை விடவும் இம்மாதம் 50வீதம் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இக்கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உதவி திட்டமிடல் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

க.விஜயரெத்தினம்
(வெல்லாவெளி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...