பெண்களின் முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ள சட்டங்களை, கொள்கைகளை மாற்ற வேண்டும் | தினகரன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ள சட்டங்களை, கொள்கைகளை மாற்ற வேண்டும்

- மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் வடமாகாண இணைப்பாளர்

பெண்கள் தொழிற்றுறையில் பிரவேசிப்பதற்கு தடையாகவுள்ள காலங்கடந்த தற்காலத்திற்கு பொருந்தாத சட்டங்களையும், கொள்கைகளையும் இலங்கை மாற்றியமைக்க வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் பவதாரணி இராஜாசிங்கம் தெரிவித்தார்.

இன்று சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் பெண்கள் கல்வித்துறை சார்ந்த துறைகளிலும் பணியாட்களாகவும் உள்ளனர். அரசு மட்டத்தின் சட்டம் சார்ந்த துறைகளால் அவர்கள் முன்னிற்பது குறைவாகவே உள்ளது. இதற்கு பல காரணங்கள் அந்தந்த அமைப்புகளால் முன்வைக்கப்படுகின்றன.

சில அவை ஆபத்தான துறைகள் என்கின்றன. பெண்களால் நேரத்தை முகாமைத்துவப்படுத்தி வேலைகளில் ஈடுபட முடியாதென்றும், குடும்பம் அவர்களை அவ்வாறு இயங்கவிடாது போன்ற சாட்டுக் காரணங்களே பெண்கள் சில பிரதான இடங்களை தொடுவதற்கு முட்டுக்கட்டையாய் உள்ளன.

பெண்கள் தொழில் துறையில் பிரவேசிப்பதற்கு தடையாக உள்ள காலங்கடந்த தற்காலத்திற்கு பொருந்தாத சட்டங்களையும் கொள்கைகளையும் இலங்கை மாற்றியமைக்க வேண்டும். விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களில் இளம் பெண்கள் ஆர்வம் கொள்ளத்தக்க வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆண்களைப் போன்று பெண்களுக்கும் சாதிக்கும் திறனுள்ளது என்பதையும் பொறியியல், விஞ்ஞான ஆய்வு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களாலும் தொழில்சார் வாழ்க்கையை கட்டியெழுப்புவது சாத்தியமென்பதையும் உணரவைக்க வேண்டும்.

இலங்கையின் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜாசிங்கராச்சியை இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு செய்வதற்கு தேசிய பொலிஸ் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை உப பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு நியமிப்பது இதுவே இலங்கையில் முதல் சந்தர்ப்பமாகும். இந்நிலையில் இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and scholarship விருது இம்முறை இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி தீமதி பெரியப் பெருமவுக்கு கிடைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நமது இலங்கை வரலாற்றில்தான் பெண் பிரதமர் மற்றும் பெண் ஜனாதிபதி ஆட்சியின் சிறப்பினை பார்த்திருக்கின்றோம். ஆனால் அப்படியிருந்துமே இன்றுவரை அரசியலிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது குறைவாகவே இருந்து வருகின்றது. உள்ளூராட்சி சபைகளில் பெண்கள் இருப்பினும் அதிகாரமுடமையும் அவர்களின் குரலுக்கான ஒத்துழைப்புமே திறம்பட இயங்க உதவும்.

பெண்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு தமது வீட்டுவேலைகளையும் செய்து முறைப்படி அவர்களது அலுவலக வேலைகளையும் செய்வதற்கான முகாமைத்துவ திறன் இயல்பிலேயே உள்ளது. ஆக தொழில்துறைகள் விரிவடைந்து அவர்களுக்கான வாய்ப்புக்கள் சரிசமமாக வழங்கப்படுவதே நாம் எதிர்கொள்ள வேண்டிய மாற்றம்.


Add new comment

Or log in with...