திறமையான ஏழை மாணவர்களை கல்வித்துறையில் ஊக்குவிக்க உதவி | தினகரன்

திறமையான ஏழை மாணவர்களை கல்வித்துறையில் ஊக்குவிக்க உதவி

- பாடசாலை விடுதிகளில் தங்கவைத்து கற்பிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய மற்றும் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு தரமான கல்வியை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை, திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் ஆரம்பித்துள்ளது. 

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தி/ உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில்  நேற்று (07) இடம்பெற்றது. 

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சண்முகம் குகதாசன் இவ்வைபவத்துக்கு தலைமை தாங்கினார். 

வலயக் கல்விப் பணிப்பாளர் சி. ஸ்ரீதரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் வ.கனகசிங்கம் மற்றும் மத குருமார் கல்வி மூகத்தினர் நன்கொடையாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.  

இங்கு உரையாற்றிய திருகோணமலை மாவட்ட நலன்புரிச் ங்கத்தின் தலைவர் சண்முகம் குகதாசன்: 

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றுக் கோட்டத்திலுள்ள சீனன்வெளி, உப்பூறல், கல்லடி, இலங்கைத்துறை வட்டவான்; மூதூர் கோட்டத்திலுள்ள பாட்டாளிபுரம், நிலாக்கேணி, இளக்கந்தை, வீரமாநகர், நல்லூர்; குச்சவெளிக் கோட்டத்திலுள்ள மரம்வெட்டிச் சோலை, வீரஞ்சோலை, நாவற்சோலை, இரணைக்கேணி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே  இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென   திறமையான 25மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தி/ உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி விடுதியில் வைத்து உணவு, உடை உறைவிடம்,கல்வி, உடற்பயிற்சி மற்றும் மருத்துவம் ஆகியன இலவசமாக வழங்கப்படும். 

கணிதம், அறிவியல், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய பாடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி இவர்களுக்கு கற்பிக்கப்படும். 

இந்த மாணவரைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி மருத்துவர்,பொறியியலாளர், சட்டவாளர் முதலிய துறைசார் வல்லுநர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .இத்திட்டத்தைச் செயற்படுத்த மாதாந்தம் 360,000 (மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ) ரூபா செலவு ஏற்படுகின்றது. மேலும் சீருடை, விடுதியுடை , படுக்கை விரிப்பு, தலையணை, நுளம்புவலை துவையல் எந்திரம் முதலியவற்றுக்கு 600,000 (ஆறு இலட்சம்) ரூபா தேவைப்படுகிறது.  

உதவிக் கல்விப் பணிப்பாளர்,பாடசாலை அதிபர்,சேவைக் கால அறிவுரையாளர், வெளி ஆசிரியர் ஒருவர், குழந்தை மருத்துவர், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நியமிக்கும் ஒருவர், வலயக் கல்விப் பணிப்பாளரால் நியமிக்கப்படுபவர் ஆகியோர் கொண்ட துறைசார் மதிபீட்டுக் குழு செயற்றிட்ட முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...