அவுஸ்திரேலியாவுக்கான தடுப்பூசி ஏற்றுமதியை முடக்கியது இத்தாலி | தினகரன்

அவுஸ்திரேலியாவுக்கான தடுப்பூசி ஏற்றுமதியை முடக்கியது இத்தாலி

அவுஸ்திரேலியாவுக்கான ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி ஏற்றுமதியை இத்தாலி தடுத்து நிறுத்தியுள்ளது.

இத்தாலியில் உள்ள அஸ்ட்ராசெனக்கா உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட 250,000 டோஸ் தடுப்பு மருந்துகளின் ஏற்றுமதியே இதனால் தடைப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தடுப்பு மருந்து தொடர்பான புதிய ஒழுங்குமுறையின்படி தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொறுப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பயன்படுத்தி முதல் நாடாகவே இத்தாலி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஒரு பொதியை இழப்பதால் தமது தடுப்பு மருந்து விநியோகத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்று அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஆணையம் ஆதரவை வெளியிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆண்டின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு வழங்க ஒப்புக் கொண்ட தடுப்பு மருந்தில் அஸ்ட்ராசெனகா 40 வீதத்தை மாத்திரமே வழங்கியுள்ளது. அந்த குறைபாட்டுக்கு உற்பத்தி பிரச்சினையை அந்த நிறுவனம் காரணமாக கூறியுள்ளது.

அஸ்ட்ராசெனகா மற்றும் பைசர் ஆகிய இரு தடுப்பு மருந்துகளின் விநியோகங்களும் தாமதிப்பது ஏற்க முடியாதது என்றும் அந்த நிறுவனங்கள் தமது ஒப்பந்தங்களை மீறி செயற்படுகின்றன என்றும் இத்தாலி பிரதமர் கியுசெப் கொண்டே கடந்த ஜனவரியில் கூறியிருந்தார்.

தடுப்பு மருந்து திட்டம் மந்தமாக செயற்படுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரந்த அளவில் விமர்சனத்திற்கு முகம்கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்து திட்டத்தின் கீழ் உறுப்பு நாடுகள் சார்பில் தடுப்பு மருந்துகளை வாங்க அந்த அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.

பைசர்–பயோஎன்டெக் தடுப்பூசியை பயன்படுத்தி அவுஸ்திரேலியா கடந்த வாரம் தமது கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை ஆரம்பித்தது. இதில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தையும் வாங்க அந்த நாடு திட்டமிட்டிருந்தது. எனினும் தடுக்கப்பட்டிருக்கும் அந்தத் தடுப்பூசிகள், வரும் வாரங்களில் விநியோகிக்கப்படவிருந்த தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று அவுஸ்திரேலியா கூறியது.


Add new comment

Or log in with...