வருடாந்த பொதுக்கூட்டத்தை நடாத்த அக்கரைப்பற்று கழகங்கள் கோரிக்கை | தினகரன்

வருடாந்த பொதுக்கூட்டத்தை நடாத்த அக்கரைப்பற்று கழகங்கள் கோரிக்கை

அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடாத்துவதற்கு விரைவாக ஏற்பாடுகளை இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் மேற்கொள்ள வேண்டும் என அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் அங்கத்துவக் கழகங்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் அங்கத்துவக் கழகங்கள் கலந்து கொண்ட ஒன்று கூடல் அட்டாளைச்சேனை மீலாத்நகர் தஹாபி விடுதியில் கடந்த சனிக்கிழமை (27.02.2021) நடைபெற்றது.

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும்,ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான அஸ்மி ஏ.கபூர் தலைமையில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் வழி நடத்திலில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்ற 17 கழகங்களில் 13 கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் 2021 / 2022 ஆம் ஆண்டுகளுக்கு செயற்படுவதற்கு நிருவாகத் தெரிவிற்கான தேர்தல் அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் கடந்த 26ம் திகதி மாலை 2.00 மணிக்கு நடைபெற சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தும் கடந்த 25ம் திகதி இரவோடு இரவாக இக்கூட்டம் மூன்று தொடக்கம் நான்கு கிழமைகளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜெஸ்வர் உமர் அறிவித்திருந்தார்.இதற்கு காரணம் காலம் போதாது என கழகங்கள் கோரிக்கை முன் வைத்ததாக அறிவிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக் கூட்டத்தை கூட்டாமல் கடந்த வருடங்களாக இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கழகங்களின் தலைவர்கள்,செயலாளர்கள் விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அவசரமாக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று லீக்கில் அங்கத்துவம் பெறும் கழகங்கள் ஒன்றிணைந்து உதைபந்தாட்டத்துறையின் வளர்ச்சிக்காக நான்கு குழுக்களாக பிரிந்து சுயமாக அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட அபிவிருத்தி வெற்றிக்கிண்ணம் என்ற பெயரில் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிட்டு எதிர்வரும் 11ம் திகதி இதன் முதலாவது போட்டி இறக்காமம் பொது விளையாட்டு மைதானத்தில் மாலை 4.00 மணிக்கு ஆலையடிவேம்பு உதயன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இறக்காமம் ஐ.ஆர்.எப்.சி.கழகம் விளையாடவுள்ளது.

இச்சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று லீக்கில் அங்கத்துவம் பெற்ற இறக்காமம் ஐ.ஆர்.எப்.சி விளையாட்டுக் கழகம், திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம்,ஆலையடிவேம்பு உதயன் விளையாட்டுக் கழகம்,பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக்கழகம்,பொத்துவில் அறுகம்மை விளையாட்டுக்கழகம்,அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக்ழகம்,அக்கரைப்பற்று பதுர் விளையாட்டுக்கழகம்,அக்கரைப்பற்று ஏ.கே.பி.விளையாட்டுக்கழகம்,அட்டாளைச்சேனை சோபர்,நியுஸ்டார்,ஹீரோஸ்,லக்கி,புளு இலவன் ஆகிய விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொள்ளவுள்ளன.

பொத்துவில்,திருக்கோவில் அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,இறக்காமம் ஆகிய பொதுவிளையாட்டு மைதானங்களில் நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகச் சுற்றுப்போட்டிகுழுவின் செயலாளரும்,ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான ஏ.எச்.ஹம்சா செயற்பட்டு வருகின்றார். விளையாட்டுத்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வாண்டு கழகங்கள் வருடாந்த பொதுக் கூட்டதை நடாத்தி புதிய நிருவாகங்களை தெரிவு செய்துள்ளதால் அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக் கூட்டத்தை மீண்டும் நடாத்துவதாயின் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மீண்டும் ஏ - படிவம், பீ - படிவம்,சீ - படிவம் ஆகியவற்றை கழகங்களுக்கு அனுப்பி புதியவர்களின் பெயர் பட்டியல்களைப் பெற வேண்டும் என கழகங்கள் இதன்போது இக்கோரிக்கையினையும் முன்வைத்தது.

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்,செயலாளர் ஆகியோர்களுக்கு அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கில் தற்போது அவர்களது கழகம் சார்பாக யார் யார் செயற்படுகின்றார்கள் என இதுவரையும் தங்களுக்கு தெரியாது என தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...