டாம் வீதி பெண்ணின் சடலம்; தலையைத் தேடி களனி கங்கையின் இரு புறத்திலும் நேற்று தேடுதல்

கொழும்பு டாம் வீதியில் பயணப் பொதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலத்திற்குரிய பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேற்படி பெண்ணின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் சகோதரனிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பெண்ணின் தலை இதுவரை கிடைக்காத நிலையிலேயே மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைத்த பின்னரே பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் தலை பொதி செய்யப்பட்டு எங்காவது நதிகளில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்றையதினம் களனி கங்கையின் இரு பக்கங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று பிற்பகல் முகத்துவாரம் முதல் ஹங்வெல்ல வரையான களனி கங்கையின் இரு கரைகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை சம்பந்தப்பட்ட கொலையுடன் தொடர்புடைய தற்கொலை செய்து உயிரிழந்த பொலீஸ் பரிசோதகருக்கு கொரோனா வைரஸ் தொட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே.பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அவரது வீட்டுக்கு அருகாமையில் பொலீசார் சில பொருட்களை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பெண்ணுடன் தமது கணவருக்கு இருந்த தொடர்பை ஏற்கனவே தாம் அறிந்திருந்ததாகவும் விசாரணையின்போது பொலிஸ் பரிசோதகரின் மனைவி தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...