கொழும்பு பல்கலை கலாசார மத்திய நிலையத்திற்கு நாளை 20 ஆண்டுகள் | தினகரன்

கொழும்பு பல்கலை கலாசார மத்திய நிலையத்திற்கு நாளை 20 ஆண்டுகள்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையம் தனது 20ஆவது அகவையை நாளை (07.03.2021) பூர்த்தி செய்கின்றது. நற்பண்புள்ள சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கலாசார மத்திய நிலையங்களை நிறுவுதல் எனும் கொள்கைக்கு அமைய கலாசார அலுவல்கள் அமைச்சு கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டதே இக்கலாசார மத்திய நிலையம் ஆகும்.

அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டுதலில், கலாசார அலுவல்கள் அமைச்சராகவிருந்த மொ.கு.கொபல்லவவின் ஆலோசனைக்கமைய நிர்மாணிக்கப்பட்ட இக்கலாசார மத்திய நிலையம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் திருமதி சாவித்திரி குணசேகரவினாலும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மொ.கு.கொபல்லவவினாலும் 2001 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 07 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இதன் செயற்பாடுகள் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிர்வகிக்கப்படினும் இவற்றின் முக்கிய பணிகள் பல்கலைக்கழக கலைமன்றத் தலைவரின் மேற்பார்வையின் கீழ் கண்காணிக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியை மட்டுமன்றி கலையையும் பயின்று தமது திறன் விருத்தியை மேம்படுத்துவதற்குரிய ஒரு சிறந்த இடமாகவே இந்நிலையம் விளங்குகின்றது.

இங்கு உடரட்ட நடனம், கிராமிய நடனம், பரத நாட்டியம், மேலத்தேய இசை மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய நுண்கலைப் பயிற்சிப் பாடநெறிகளும் மொழித் திறனை விருத்தி செய்வதற்காக சிங்களம், தமிழ் போன்ற பாடநெறிகளும் இலவசமாக நடத்தப்படுகின்றன. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு இந் நிலையத்தில் கலையைப் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் நடனக் குழுக்களை வழங்குதல், தேவையான இசைக் கருவிகளை வழங்குதல் என்பனவும் இக்கலாசார மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் சேவைகளாகும்.

அதுமட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் போக்குவதற்காக நூல்நிலைய வசதியும் காணப்படுகின்றது. விருது பெற்ற சிறந்த நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைத் தொகுப்பு நூல்களும் இங்கு காணப்படுகின்றன.

தற்போது இங்கு நடத்தப்படும் பாடநெறிகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு தமது பூரண ஒத்துழைப்பை இந்நிலையத்தின் வளவாளர்கள் வழங்கி வருகின்றனர்.

கலாசார அலுவல்கள் அமைச்சினால் கலாசார மத்திய நிலையங்களுக்கு இடையில் வருடாந்தம் நடத்தப்படும் போட்டியான 'பிரதிபா' நடன, சங்கீத மற்றும் நாடகப் போட்டிகளிலும் இக்கலாசார மத்திய நிலையம் சார்பாக பல மாணவர்கள் பங்குபற்றி சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், இறுதியாக நடைபெற்ற போட்டியில் வாத்திய இசைப்பிரிவுப் போட்டியில் போட்டியிட்ட மாணவி சான்றிதழை மட்டுமன்றி விருதையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

20 ஆவது அகவையைப் பூர்த்தி செய்யும் இக்கலாசார மத்திய நிலையமானது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவின் வழிகாட்டுதலின் கீழும், கொழும்பு பல்கலைக்கழக கலை மன்றத் தலைவர் கலாநிதி எம்.ரி.எம்.மஹீஸ் மேற்பார்வையின் கீழும் இயங்குகின்றது. கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரியாக திருமதி சுபாசினி கேசவனும், உதவிக் கலாசார உத்தியோகத்தராக செல்வி எஸ்.எச்.ஜி.பி.டி.காயத்திரியும் தமது பணியினைச் செவ்வனே ஆற்றி வருகின்றனர்.

எமக்கே உரித்தான கலையைப் பாதுகாத்து அவற்றை எதிர்காலப் பரம்பரையான பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கற்பிக்கும் கூடமாக இக்கலாசார மத்திய நிலையம் இயங்கி வருகின்றது.


Add new comment

Or log in with...