மன்னார் முசலி பிரதேசத்திலும் அடக்கம் செய்வதற்கான இடம் | தினகரன்

மன்னார் முசலி பிரதேசத்திலும் அடக்கம் செய்வதற்கான இடம்

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடத்தினை முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அந்த பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஜ.எச் சுபிஹான் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் சுகாதார தரப்பினருடன் அது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு இணக்கப்பாடுகள் ஏற்பட்டதன் பின்னர் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

கொவிட்19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு கொவிட்19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார்.

எனினும், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே அவ்வாறான சடலங்களை முசலி பகுதியில் அடக்கம் செய்வதற்கான இடத்தினை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அந்த பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஜ.எச் சுபிஹான் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...