மின்னுற்பத்தியில் மாற்றுவழிகளை நாட வேண்டியது காலத்தின் தேவை

நாட்டில் வரட்சி ஆரம்பமாகி விட்டது. இலங்கையின் வழமையான வருடாந்த காலநிலையின்படி மார்ச் மாதத்தின் நடுப் பகுதியில் உஷ்ணம் நிறைந்த காலநிலை ஆரம்பமாகி விடுவதுண்டு. இந்த வெப்பம் ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில் உச்சத்துக்குச் செல்வது வழமையாகும். மே மாதம் பிறந்ததன் பின்னரே நாட்டில் உஷ்ணமான காலநிலை படிப்படியாக தணியத் தொடங்குவதுண்டு.

இலங்கையில் மாத்திரமன்றி எமது அயல்நாடான இந்தியாவிலும் வருடம் தோறும் வழமையான காலநிலை இது போன்றதாகும். ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உஷ்ணம் குறைவானதாகும். இந்தியாவின் சில மாநிலங்களில் ஏப்ரல் மாத வெப்பமான காலநிலையின் போது பலர் மரணமடைவதுமுண்டு.

எமது நாட்டுக்கு இன்றைய காலப் பகுதி உஷ்ணத்தின் ஆரம்பப் பகுதியாகும். நாட்டின் அனைத்துப் பகுதியிலும் மழை பெய்வது நின்று விடும். குளங்கள் படிப்படியாக வற்றத் தொடங்கும். நெற்செய்கைக்கு போதிய நீர்ப்பாசனம் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைவதுண்டு. விவசாயத்துக்கு நீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் மற்றும் உபஉணவுப் பயிர்கள் கருகி அழிவதுமுண்டு. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இழப்பு அதிகம்.

அதேசமயம், எமது நாடு சிறந்த நீர்வளம் நிறைந்த நாடாக கருதப்படுகின்ற போதிலும், இலங்கையின் பல பிரதேசங்களில் மக்கள் குடிநீருக்கே அவதியுறுகின்ற நிலைமை இன்னும் தொடரவே செய்கின்றது. பின்தங்கிய கிராமங்கள் பலவற்றில் தண்ணீருக்காக மக்கள் அலைகின்ற அவலத்தை இன்றும் எங்களால் சாதாரணமாகக் காண முடிகின்றது. அதுவும் நாட்டின் வரட்சியான காலப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகவும் அதிகமாகும்.

இவ்வாறிருக்கையில், நாட்டில் வரட்சியான காலநிலை தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தண்ணீரை மக்கள் இனிமேல் சிக்கனமாக பயன்படுத்தத் தொடங்க வேண்டுமெனவும், மின்வெட்டுக்கான நிலைமை எதிர்நோக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளங்களின் நீர்மட்டம் இனிமேல் படிப்படியாக வற்றத் தொடங்குவதனால், குழாய்நீர் விநியோகத்திலும் சிரமங்கள் ஏற்படுவதற்கு இடமுண்டு. எனவே மக்கள் இனிமேல் வரட்சியை சமாளிக்க தயாராக வேண்டியுள்ளது.

வரட்சியான காலப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளில் பிரதானமானது மின்வெட்டு ஆகும். அறிவியல் துறையில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ள இன்றைய உலகத்தை மின்சாரமே இயக்குகின்றது எனலாம். மின்சாரம் இன்றேல் உலகமே ஸ்தம்பிதமாகி விடும். அதனால் ஏற்படுகின்ற பொருளாதார இழப்புகளும் மிகவும் அதிகம்.

வரட்சி காரணமாக மின்வெட்டுக்கான சாத்தியம் எதிர்நோக்கப்படுவதால் பாதிப்புகளும் தவிர்க்க முடியாதவையாகும். இப்போதிருந்தே தண்ணீரையும், மின்சாரத்தையும் மக்கள் அனைவரும் சிக்கனமாகப் பயன்படுத்தத் தொடங்கினால் மாத்திரமே நெருக்கடிகளை பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் மின்சாரம் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கி முக்கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலம் கடந்து விட்ட போதிலும் இன்னுமே நீர்மின்சாரத்தையும், மின்பிறப்பாக்கி மற்றும் அனல் மின்சாரத்தையுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையில் சுமார் நாற்பது சதவீதமான மின்சாரம் நீர்த்தேக்கங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றது.

மிகுதிப் பகுதியான மின்சாரம் எரிபொருள் உதவியுடனான மின்பிறப்பாக்கிகளில் இருந்தும், நுரைச்சோலையில் நிலக்கரி மூலம் அனல் மின்னாகவுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. காற்றாலை மற்றும் சூரியப் படலம் மூலம் பெறப்படுகின்ற மின்சாரம் மிகவும் குறைவானதாகும். எனவேதான் வரட்சியான காலநிலை ஏற்படுகின்ற வேளைகளில் நாம் மின்நெருக்கடியை சந்திக்க நேரிடுகின்றது.

டீசல் உதவியுடன் மின்பிறப்பாக்கியினால் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மிகுந்த செலவினம் நிறைந்ததாகும். அதேசமயம் நிலக்கரியின் உதவியுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற போது சூழலுக்கு அதிகளவு மாசு விடுவிக்கப்படுகின்றது. இவையிரண்டுமே நாட்டுக்குப் பொருத்தமானவையல்ல. அதிக செலவினத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிக்கின்ற நிலைமையும் ஏற்படுகின்றது.

எனவேதான் புதுப்பிக்கத்தக்க இயற்கை சக்திகளின் உதவியுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் உலகம் இன்று கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. எமது நாட்டிலும் இவ்வாறான திட்டம் தற்போதுதான் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காற்றாலைகளின் மூலமான மின்னுற்பத்தி மற்றும் சூரியப் படல மின்னுற்பத்தி போன்றவற்றை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிட முடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் மன்னாரில் காற்றாலை ஊடான பாரிய மின்னுற்பத்தித் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்ததை இங்கே குறிப்பிடலாம். அதேசமயம் வீட்டுக் கூரைகளின் மீது சூரியப் படல்களை பொருத்துதல் மற்றும் சூரியப் படல் வீதிவிளக்குகள் அமைத்தல் போன்றவற்றில் இலங்கை இப்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

மனித வாழ்வின் முன்னேற்றங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மின்சாரத் தேவையும் அதிகரித்தபடியே செல்கின்றது. அதற்கேற்றவாறு சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத வகையில் மின்னுற்பத்தியை மேற்கொள்வதில் நாம் கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகும்.


Add new comment

Or log in with...