அமெரிக்க பாராளுமன்றில் அத்துமீறி நுழையும் சதித்திட்டம் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு அதிகரிப்பு: அமர்வு ஒத்திவைப்பு

அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழையும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதோடு நேற்றைய பிரதிநிதிகள் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சிக் குழு ஒன்றின் மூலம் இந்த அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் தகவல்கள் குறிப்பிட்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் பற்றிய விபரம் வெளியானதை அடுத்து பிரதிநிதிகள் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டபோதும் செனட் சபை வழக்கம்போல் கூடியது. ஜனாதிபதி ஜோ பைடனின் 1.9 டிரிலியன் கொவிட்–19 நிவாரண சட்டமூலம் பற்றி நேற்று அங்கு விவாதிக்கப்பட்டது.

“பாராளுமன்றத்தின் மீதான எந்த ஒரு அச்சுறுத்தலையும் தடுக்க எமது திணைக்களம் எமது உள்ளூர், மாநில மற்றும் மத்திய நிர்வாகங்களுடன் இணைந்து செயற்பாடும்” என்று அமெரிக்க பாராளுமன்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இந்த உளவுத் தகவலை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதன் பாரதூரம் காரணமாக இந்த தகவல் குறித்த மேலதிக விபரங்களை இந்த நேரத்தில் பகிர்ந்துகொள்ள முடியவில்லை” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் இருக்கும்போதே அத்துமீறி நுழைந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மாதங்களின் பின்னரே புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கலவரத்தில் பொலிஸார் ஒருவர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது அமெரிக்க ஜனநாயக கட்டமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பாராளுமன்ற பொலிஸ் தலைவர் இராஜினாமா செய்தார்.

முற்றுகை தொடர்பில் அமெரிக்க நீதித் திணைக்கள 300க்கும் அதிமானோர் மீது குற்றச்சாட்டு சுமத்தியது. இவர்களில் வலதுசாரி கிளர்ச்சிக் குழுக்களின் உறுப்பினர்களும் உள்ளனர்.

டிரம்ப் இந்த வன்முறையைத் தூண்டியதாக குற்றம்சாட்டிய ஜனநாயகக் கட்சியினர் அவர் மீது இரண்டாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தபோதும் அது தோல்வி அடைந்தது.


Add new comment

Or log in with...