1st T20: அகில தனஞ்சய ஹெட்ரிக்; பொல்லார்ட் 6x6; மே.இந்திய தீவுகள் அபார வெற்றி

1st T20: அகில ஹெட்ரிக்; பொல்லார்ட் 6x6; மே.இந்திய தீவுகள் அபார வெற்றி-1st T20-SLvWI-WI Won by 4 Wickets Sparing 41 Balls

- ரி20 யில் 6 x 6 அடித்த இரண்டாவது வீரரானார் பொல்லார்ட்
- 13.1 ஓவரில் போட்டி நிறைவு; 41 பந்துகள் மீதம்

சுற்றுலா இலங்கை அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றியை ஈட்டியுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று (04) அதிகாலை 3.30 மணியளவில் மேற்கிந்திய தீவுகளின், அன்டிகுவாவின் கூலிஜ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு பாணி தொடர்பில் போட்டித் தடை விதிக்கப்பட்டு, மீண்டும் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ள அகில தனஞ்சய, போட்டியின் நான்காவது ஓவரை வீசியதோடு, அதில் அவர் ஹெட்ரிக் சாதனையை (3.2, 3.3, 3.4) நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவில் லூயிஸ் (28), கிறிஸ் கெயில் (0), நிகொலஸ் பூரன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளை, அகில தனஞ்சய வீசிய அவரது அடுத்த ஓவரின் (போட்டியின் 6ஆவது ஓவரின்) அனைத்து பந்துகளுக்கும், கீரன் பொல்லார்ட் 6 ஓட்டங்களை பெற்றதன் மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 6 தடவைகள் 6 ஓட்டங்கள் பெற்ற இரண்டாவது வீரராக தன்னை பதிவு செய்து கொண்டார். இதற்கு முன்னர் யுவராஜ் சிங் ரி20 போட்டியில் (2007 ரி20 உலகக் கிண்ணம்) இச்சாதனையை நிலைநாட்டிய முதலாவது வீரராக தனது பெயரை நிலை நிறுத்தியிருந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (2007 உலகக் கிண்ணம்), முதன் முதலில் 6 பந்துகளில் 6 ஓட்டங்களை பெற்ற முதலாவது வீரராக, தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஹேர்ஷல் கிப்ஸ் திகழ்கிறார்.

 

 

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் உச்சபட்சமாக
பெத்தும் நிஸ்ஸங்க 39 (34)
நிரோஷன் திக்வெல்ல 33 (29)
வணிந்து ஹசரங்க 12 (14)

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள்
ஓபட் மெக்கொய் 2/25 (4.0)
கெவின் சின்க்ளயர், பிடல் எட்வர்ட்ஸ், ஜேசன் ஹோல்டர், ட்வயன் ப்ராவோ, fபேபியன் அலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியை ஈட்டியது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஆகக்கூடுதலாக,
கீரன் பொல்லார்ட் 38 (11) (6x6)
ஜேஸன் ஹோல்டர் 29 (24)*
எவின் லூயிஸ் 28 (10)
லெண்ட்ல் சிம்மன்ஸ் 26 (15)

பந்து வீச்சில் இலங்கை அணி
வணிந்து ஹசரங்க 3/12 (4.0)
அகில தனஞ்சய 3/62 (4.0)

போட்டியின் நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கீரன் பொல்லார்ட் தெரிவானார்.

அதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கின்றது.

இத்தொடரின் இரண்டாவது போட்டி மார்ச் 06இலும், 3ஆவது போட்டி மார்ச் 08இலும் இடம்பெறவுள்ளது.


Add new comment

Or log in with...