நெசவுப் பயிற்சி நிலையம் கைவிடப்பட்டதால் கவலை

கிழக்கு மாகாண கிராமிய தொழில் துறை திணைக்களத்தின் கீழுள்ள சின்னமுகத்துவாரம் நெசவு பயிற்சி நிலையம், கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சின்னமுகத்துவாரம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள நெசவு பயிற்சி நிலையம், சுனாமிக்குப் பின்னரான காலத்திலிருந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இதுகுறித்து இளைஞர், யுவதிகள் விசனம் தெரிவிக்கின்றனர். நெசவுப் பயிற்சி நிலையத்தின் கூரை உடைந்து கதவுகள், ஜன்னல்கனின்றி காணப்படுகின்றன.

இரவு வேளைகளில், இங்கு சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நெசவு நிலையம் இயங்காதுள்ளதால், இளைஞர் யுவதிகள், தொழில்வாய்ப்புக்களையும்  இழந்துள்ளனர்.

கடற்கரையிலிருந்து நூறு மீற்றருக்குட்பட்ட பகுதியிலே இந்த நெசவு நிலையம் உள்ளது. எனவே, பிறிதொரு இடத்தில் இயங்க வைக்க நடவடிக்க எடுக்குமாறும் பொது மக்கள் கோரியுள்ளனர்.

இந் நெசவுத் தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதால் பலரது குடும்ப வருமானத்துக்கு வளிகோலும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

(மண்டூர் குறூப் நிருபர்)

 


Add new comment

Or log in with...