2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் திட்டம் | தினகரன்

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் திட்டம்

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அது குடியரசு கட்சியினரின் வாக்குகளை உடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதல் முறை பொது மேடையில் உரையாற்றியபோதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் இதன்போது அவர் குறிப்பார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது ‘அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் கொள்ளை அமெரிக்காவை கடைசி இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப் மீது பாராளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்ற சில வாரங்களிலேயே அவர் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

“நாம் ஆரம்பித்த இந்த சிறப்பான பயணத்தின் முடிவு வெகுதொலைவில் உள்ளது. புதிய கட்சியை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் குடியரசுக் கட்சியில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓர்லாண்டில் கன்சர்வேர்டிவ் அரசியல் செயற்பாட்டு மாநாட்டிலேயே அவர் உரையாற்றி இருந்தார்.

எனினும் ட்ரம்ப் மீதான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உட்பட சமூக ஊடகங்களின் தடை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வன்முறையை துண்டியதாகவே ட்ரம்ப் மீது இந்தத் தடை கொண்டுவரப்பட்டது.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியது தொடக்கம் புளோரிடாவில் இருக்கு தமது கொல்ப் விடுதியில் வசித்து வருகிறார்.


Add new comment

Or log in with...