பாகிஸ்தானுக்கு இந்தியாவிடம் விசா பெற்றுத்தர ஐ.சி.சி உறுதி | தினகரன்

பாகிஸ்தானுக்கு இந்தியாவிடம் விசா பெற்றுத்தர ஐ.சி.சி உறுதி

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டிக்காக பாகிஸ்தான் வீரர்கள், கிரிக்கெட் நிர்வாகிகள், செய்தியாளர்கள், ரசிகர்களுக்கான விசாவுக்காக இந்திய கிரிக்கேட் சபையுடன் எழுத்துப்பூர்வ உறுதி பெற்றுத்தருவதாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சி (ஐ.சி.சி) தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த சபைத் தலைவர் எசான் மானி கூறியதாவது:

“டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானியர்களுக்கான விசா வழங்கப்படுமென, இந்திய கிரிக்கெட் சபை 2020 டிசம்பருக்குள் எழுத்துப்பூர்வ உறுதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால், அந்த காலகட்டத்தில் அதன் தலைவர் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் இருந்தார்.

எனவே, இந்த விவகாரத்தை மீண்டும் ஐ.சி.சியிடம் எடுத்துச் சென்றுள்ளேன்.

அடுத்த மாத இறுதிக்குள்ளாக விசா தொடர்பான உறுதியை இந்திய சபையிடம் எழுத்துப்பூர்வமாக பெற்றுத்தருவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. விசாவுக்காக உறுதி கோருவது எங்கள் உரிமை. உலகக் கிண்ணப் போட்டியில் நாங்கள் பங்கேற்பதை யாராலும் தடுக்க முடியாது.

ஒன்று, இந்தியாவில் நடக்கும் அந்தப் போட்டியில் உரிய நடைமுறையின் படி பங்கேற்போம். அல்லது, நாங்கள் பங்கேற்கும் வகையில் அந்தப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்.

எங்களுக்கான விசா பிரச்சினை தவிர்த்து, கொரோனா சூழலில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென இந்திய கிரிக்கெட் சபையிடம், ஐ.சி.சி வலியுறுத்தியுள்ளது. தேவையேற்பட்டால் உலகக் கிண்ண போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தும் திட்டமும் ஐ.சி.சியிடம் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றால், திட்டமிட்டபடி ஆசிய கிண்ணப் போட்டியை நடத்த இயலாது. ஏனெனில் இரண்டின் ஆட்டங்கள் நடைபெறும் நாட்கள் ஒன்றோடொன்று குறுக்கிடுகின்றன” என்று மானி கூறினார்.

முன்னதாக ஆசிய கிண்ண போட்டியை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தது. பின்னர் அந்நாட்டுக்கு இந்திய அணி செல்வதில் பிரச்சினை இருப்பதன் காரணமாக, போட்டியை நடத்தும் பொறுப்பு இலங்கையின் வசம் சென்றுள்ளது.


Add new comment

Or log in with...