உருளைக்கிழங்கின் வரியை அதிகரிக்க நடவடிக்கை

- தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற உருளைக்கிழங்கு அறுவடைவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வில் அறுவடைக்கு தயாரான உருளைக் கிழங்குகளை சம்பிரதாயபூர்வமாக அறுவடை செய்து வைத்தார். பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன்,  வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் எஸ்.அஞ்சனாதேவி, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உள்ளூர் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் விவசாயிகளின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார். குறிப்பாக உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதன் ஊடாகவே உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்க முடியும் என அங்கஜன் இராமநாதன் இராஜாங்க அமைச்சருக்கு  சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் உருளைக்கிழங்கிற்கான வரியினை ஒரிரு வாரங்களுக்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து வரி அதிகரிப்பு சம்மந்தமாக விதை உருளைக்கிழங்கு பயிரினை விதைப்பதற்கு முன்னரே நடவடிக்கை எடுப்பதன் மூலம் பல விவசாயிகளை உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதாக அமையும் என விவசாயிகள் கேட்டுகொண்டனர்.  அதற்கும் உரிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கரவெட்டி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...