மனநலம் குன்றிய மகனின் தாக்குதலில் தந்தை பலி | தினகரன்

மனநலம் குன்றிய மகனின் தாக்குதலில் தந்தை பலி

- காலை நேரம் சிறுப்பிட்டியில் பரிதாபம்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் மனநலம் குன்றிய மகனது தாக்குதலுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று காலை 6மணியளவில் இராசவீதி சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்  உயிரிழந்தவர் 64வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி சீனிவாசன் என்பவராவர்.

ஒரளவு மனதளவில் பாதிக்கப்பட்ட மகனுக்கும் தந்தைக்கும் இடையில் காலை சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மகன் இரும்பு கம்பியால் தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் ஊர் மக்களால் பிடித்து அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நபர் மனநோயினால் பிடிக்கப்பட்டு இருந்ததாகவும் தினந்தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் இளைய மகன் தெரிவித்தார்.

தந்தையினை தாக்கும் போது தன்னால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டதாகவும் மூத்த அண்ணன் ஆக்ரோசமாக தனது தந்தையை தாக்கி கொலை செய்ததாகவும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான 33 வயதுடைய இளைஞன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலதிக விசாரணைகளை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஊடாக அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறை விசேட, யாழ்.விசேட, சுண்டுக்குளி நிருபர்கள்


Add new comment

Or log in with...