த.தே.கூவிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் | தினகரன்

த.தே.கூவிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேச்சாளர் தேவை என்ற காரணத்தினால் எமது கட்சியின் பேச்சாளராக குருசாமி சுரேன் செயற்படுவார். அதனை ஏகமனதாக தலைமைக்குழு தெரிவு செய்துள்ளது. அவர் அனைத்து விடயங்களையும் கையாள்கின்ற அதேநேரம், எமது கட்சி எடுக்கின்ற தீர்மானங்களையும், அரசியல் ரீதியாக இங்கு இருக்கின்ற தூதரகங்களை சந்திக்கின்ற செயற்பாடுகளையும் அவர் ஊடாகவே இனி மேற்கொள்ளப்படும்.

தமிழ் கட்சிகள் எல்லோரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக் கூடிய வடிவமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். அதை செய்வதற்கான முழு முயற்சியையும் நாம் செய்ய தயாராக இருக்கின்றோம். ஏனைய கட்சிகள் இணைகின்ற போது தனிப்பட்ட கட்சிகள் தமக்கு அதிகாரங்களை கூட்டுகின்ற செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது. தேர்தலில் தோற்றவர்களை சேர்க்கக் கூடாது என நாம் யோசிக்கவில்லை. அது மக்களின் விருப்பம். ஒற்றுமையை கொண்டு வர வேண்டும்.

வவுனியா விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...