டிபென்டர்ஸ், கொழும்பு எப்சி அணிகள் வெற்றி | தினகரன்

டிபென்டர்ஸ், கொழும்பு எப்சி அணிகள் வெற்றி

தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து முன்னணிக் கழகங்களுக்கிடையே இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற முன்பருவ காலத்துக்கான சுப்பர் லீக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்ற சுற்றுப் போட்டியின் மேலும் இரண்டு போட்டிகள் சனிக்கிழமை (27)நடைபெற்றன. றெட் ஸ்டார் (இரத்மலானை) எதிர் டிபென்டர்ஸ் (இலங்கை இராணுவ அணி) கழகங்களுக்கு இடையேயான போட்டியும் கொழும்பு எப்சீ எதிர் அப்கண்ட்றி லயன்ஸ் (நாவலப்பிட்டி) ஆகிய அணிகளுக்கடையிலான போட்டியும் சுகததாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்றன.

முதலாவது போட்டி - றெட் ஸ்டார் (இரத்மலானை) எதிர் டிபென்டர்ஸ் (இலங்கை இராணுவ அணி)

இப்போட்டியில் டிபென்டர்ஸ் (இலங்கை இராணுவ) விளையாட்டுக் கழகம் றெட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை 02 -01 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தது. ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் டிபென்டர்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக டாங் ஸ்டீபன் ஒரு கோலையும் 90+01 ஆவது நிமிடத்தில் லக்‌ஷித்த ஜயசிங்ஹ ஒருகோலையும் பெற்றக் கொடுத்தனர். றெட் ஸ்டார் அணி சார்பாக 71 ஆவது நிமிடத்தில் மொஹமட் றிஸ்லான் ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார்.

இச்சுற்றுப் போட்டியில் றெட் ஸ்டார் அணி பெற்றுக்கொண்ட இரண்டாவது தோல்வியும் டிபென்டர்ஸ் அணி பெற்றுக் கொண்ட முதலாவது வெற்றியுமாகும்.

இப்போட்டியில் றெட் ஸ்டார் அணியின் இஸ்மயில் அபுமேருக்கும் (டிபென்டர்ஸ் அணியின் ஹென்றி அப்பையாவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

இப்போட்டியின் மத்தியஸ்தராக ஹோமாகமவைச் சேர்ந்த கே.கே.டீ. சமீர கடமையாற்றினார். 2021 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்த்தராக (FIFA Referee) நியமிக்கப்பட்டவராவார். உதவி மத்தியஸ்தர்களாக ஏ.ஏ.பீ.கே.புத்திக டயஸ் (ஹோமாகம),ரீ.சீ.வில்லியம்ஸ் (மஹரகம) மற்றும் நான்காவது மத்தியஸ்தராக சத்துர மதுரங்க (கொழும்பு) ஆகியோர் கடமையாற்றினர்.

இரண்டாவது போட்டி - கொழும்பு எப்சி எதிர் அப்கண்ட்றி லயன்ஸ் (நாவலப்பிட்டி)

இப்போட்டியில் கொழும்பு எப்சி விளையாட்டுக் கழகம் அப்கண்ட்றி லயன்ஸ் (நாவலப்பிட்டி) விளையாட்டுக் கழகத்தை 03 -01 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தது.

கொழும்பு எப்சி அணி சார்பாக சவான் ஜொஹார் ஆட்டத்தின் 03 ஆவது நிமிடத்திலும் சபீர் றஸூனியா 53 ஆவது நிமிடத்திலும் சமோத் டில்ஷான் 80 ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பெற்றுக்கொண்டனர். அப்கண்ட்றி லயன்ஸ் அணியின் சார்பாக எல்.எச். கே. இஷான் 89 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில் கொழும்பு எப்சி விளையாட்டுக் கழக வீரர்களான சலன சமீர, சரித்த ரத்நாயக்க, நிரான் கனிஷ்க்க ஆகிய மூன்று வீர்ர்களுக்கும் அப்கண்ட்றி லயன்ஸ் அணியைச் சேர்ந்த காலித் அஸ்மில், எலிஜா ஆரி ஆகிய இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் அப்கண்ட்றி லயன்ஸ் அணியின் ஆர்.ஏ.சீ. மதுஷான் மற்றும் 90+1 ஆவது நிமிடத்தில் கொழும்பு எப்.சீ அணியின் அஹமட் சஸ்னி ஆகிய வீர்ர்களுக்கு சிவப்பு அட்டை காட்டி மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இப்போட்டியில் சர்வதேச உதைபந்தாட்ட மத்தியஸ்தர் நிவோன் ரொபேஷ் மத்தியஸ்தராக கடமையாற்றினார், இவர் ஓர் சர்வதேச மத்தியஸ்தர் என்ற வகையில் பல சர்வதேச போட்டிகளில் மத்தியஸ்தம் வகித்த அநுபவம் மிக்கவராவார். ஏனைய மத்தியஸ்தர்களாக றியாசி (கம்பஹா), தயான் செந்தநாயக்க, எஸ்.ஏ.எஸ். மதுசங்க ஆகியோர் கடமையாற்றினர்.

இரு போட்டிகளிலும் ஆசிய உதைபந்தாட்டச் சம்மேளன போட்டி ஆணையாளரும் முன்னாள் சர்வதேச மத்தியஸ்தருமாகிய சுனில் செனவீர மத்தியஸ்தர் மதிப்பீட்டாளராகக் கடமையாற்றினார்.

திருகோணமலை குறூப், வடகொழும்பு தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...