தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பு!

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டதிலிருந்து தி.மு.கவுக்கு எதிராக அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது.டெல்லி. ஆனாலும் இன்றைய கருத்துக்கணிப்புகளின்படி தி.மு.க. வுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் தி.மு.கவுக்கு பெரும் சவால்கள் இன்று குவிந்துள்ளன.

தேர்தல் திகதி யாரும் எதிர்பார்க்காத நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மார்ச் முதல் வாரத்தில் திகதி அறிவிப்பு இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியும் சில கூட்டங்களில் பேசும் போது மார்ச் முதல் வாரத்தை கோடிட்டு காட்டினார். இதனால் கட்சிகள் முக்கிய வேலைகளை சில நாள்களில் முடிக்கலாம் என திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே தேர்தல் திகதி வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் செலவுக்கான பணம், ‘கொடுக்க வேண்டியவர்களுக்கு’ கொடுக்கும் பணம் ஆகியவை ஆளும் அ.தி.மு.க தரப்பிலிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்கெனவே சென்று விட்டது என்கிறார்கள். ஆனால் தி.மு.க அதற்கான வேலைகளை தொடங்கவே இல்லை. தி.மு.க பணத்துக்காக நம்பியிருந்த சிலரது நிறுவனங்கள் சோதனையில் சிக்கின. மேலும் சிலர் மிரட்டப்பட்டுள்ளனர்.

இதனால் பணத்தை தயார் செய்து தொகுதி பக்கம் அனுப்ப தாமதமான நிலையில் தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவு நிதித் தேவையை பூர்த்தி செய்யும் ஐ.ஜே.க கட்சி பாரிவேந்தரும் அணி மாறி விட்டார். அவரும் டெல்லியிலிந்து வந்த மிரட்டல்களுக்குப் பின்னர்தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகின்றது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தி.மு.கவுக்கு இரண்டு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.கவுக்கான பணம் வரும் இடங்கள் அடைபட்டதும், பண விநியோகம் தொகுதி பக்கம் செல்லாததும் முக்கியமான ஒன்று.

மற்றொன்று மூன்றாவது அணியை கமல், டி.டி.வி, சீமான், சரத்குமார் மேலும் சில கட்சிகள் என வலுவாக அமைக்க நடைபெறும் முயற்சிகள். ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசினாலும், தி.மு.கவுக்கு ஆதரவு அதிகரித்தாலும் கடைசி நேரத்தில் பணம் முக்கிய பங்காற்றும். மேலும் சட்டமன்றத் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தனித்துப் போட்டியிட்டாலே வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையிலேயே தி.மு.க இவ்வளவு நாள்கள் இருந்தது. அதனாலே கூட்டணிக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே ஒதுக்க முடியும் என தெரிவித்து வந்தது. ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை. தி.மு.க கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய இடத்தில் உள்ளது.

தொகுதி எண்ணிக்கையில் கண்டிப்பு காட்டினால் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மூன்றாவது அணியில் தஞ்சம் அடைய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அக்கட்சிகளுடன் பேசி உதய சூரியன் சின்னத்தில் அவற்றை போட்டியிட வைக்க முயல வேண்டும்.

இதேசமயம் அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 170இடங்களில் உறுதியாக நிற்கும் என்கிறார்கள். பா.ம.கவிற்கு 23தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.கவுக்கு 18, தே.மு.தி.கவுக்கு 18, த.மா.காவுக்கு 5என 64இடங்கள் போக அ.தி.மு.க 170தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க 170தொகுதிகளில் போட்டியிடும் என்கிறார்கள். தி.மு.க சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளில் ம.தி.மு.கவுக்கு 7, வி.சி.க 7, இ.யூ.மு.லீ கட்சிக்கு 3, ம.ம.க கட்சிக்கு 2, ம.ஜ.கவுக்கு 02, எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 2, கொமதேக கட்சிக்கு 2, த.வா.க 2, இதர கட்சிகளுக்கு 2என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தேச பட்டியல் கூறுகிறது. 

இது போக, காங்கிரஸ் 25தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5தொகுதிகளும் போட்டியிடும் என இப்பட்டியல் கூறுகிறது.

தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 35நாட்கள் கூட இல்லாத நிலையில், தி.மு.கவுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. இதை எவ்வாறு சமயோசிதமாக சமாளிக்கப் போகிறது, தனக்கு எதிராக வரும் ஆயுதங்களை எப்படி கையாளப் போகிறது என்பது அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இனி ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்களுக்கு பஞ்சமிருக்காது.

தமிழக சட்டப் பேரவையின் பதவிக் காலம் எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அதேபோல் கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் நிறைவடைய உள்ளதால் இந்த மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில்- 234, புதுச்சேரி- 30, கேரளா- 140, மேற்கு வங்கம்- 294, அசாம்- 126தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் முமுமையாக விலகாத நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது? எந்த மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது? பதற்றமான வாக்குச் சாவடிகளில் எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.   கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியும், புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் திகதியும், அசாம் மாநிலத்தில் மார்ச் 27ஆம் திகதியும், மேற்கு வங்கத்தில் மார்ச் 27ஆம் திகதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் 3கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மே மாதம் 2ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த 5மாநிலங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க 2021சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பை ஏ.பி.பி என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சியைப் பிடிக்கப் போவது என்ற தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பை அது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234தொகுதிகளில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு 154முதல் 162தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஏ.பி.பி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

தி.மு.கவுக்கு 41சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58-66இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 28.6சதவீத வாக்குகள் மட்டுமே இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வியையும் ஏ.பி.பி மக்களிடம் முன்வைத்தது.

இதில், எதிர்க் கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த முதல்வர் வேட்பாளர் போட்டியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி இரண்டாமிடம் பிடித்துள்ளார். 7.8%பேர் சசிகலா தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

உடல்நலம் காரணமாக அரசியலுக்குள் பிரவேசிக்காமல் உள்ள ரஜினிகாந்தை முதல்வராக காண வேண்டும் என்று 3.2 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...