சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள் | தினகரன்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

2021ஆம் ஆண்டுக்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி இந்தியாவின் சென்னை வை.எம்.சி.ஏ நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சி மார்ச் 09 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் வெளியாகியிருக்கின்றன.

எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள 'கிகோர்' (சோவியத் ரஷ்ய இலக்கியம்), 'தரணி' ஆகிய புதிய நாவல்களையும், 'திருமதி.பெரேரா', 'அந்திமக் காலத்தின் இறுதி நேசம்' 'சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்' ஆகிய புதிய சிறுகதைத் தொகுப்புகளையும் இந்தக் கண்காட்சியில் பெற்றுக் கொள்ளலாம்.

அத்தோடு, இதுவரை வெளியாகியுள்ள எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி, காலச்சுவடு, டிஸ்கவரி புக்பேலஸ், பாரதி புத்தகாலயம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும். எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நூல்களுக்காக இதுவரை இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி மற்றும் வாசகசாலை விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை எழுத்தாளர் ஒருவரது அதிகளவு எண்ணிக்கையான புதிய நூல்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுவது இதுவே முதல் தடவையாகும்.


Add new comment

Or log in with...