காணாமலாக்கப்பட்டோரது உறவுகளால் கிளிநொச்சியில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு | தினகரன்

காணாமலாக்கப்பட்டோரது உறவுகளால் கிளிநொச்சியில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒரு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டமானது  இன்று  திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பித்து பழைய வைத்தியசாலையைச் சென்றடைந்து கவனயீர்ப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.கருணாவதி தெரிவிக்கையில், 

இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, மசிடோனியா, மாலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இணையனுசரணை  நாடுகள் பரிந்துரைக்க வேண்டும். 

அத்துடன், கடந்தகால சம்பவங்களையும் நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புக்கூறலை உண்மையாகக் கையாள எவ்வித சந்தர்ப்பங்களும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடியும்.  இந்நிலையில், நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு மதத்தலைவர்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு வேண்டி நிக்கின்றோம். 

தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே எமக்கான நீதியைப் பெறமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...