ஹம்ஸ யோகம் -09 | தினகரன்

ஹம்ஸ யோகம் -09

பிராணாயாமம் என்பது தினசரி சந்தியாவந்தனத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், இது ஒரு சாதகன் ஆன்ம முன்னேற்றம் விரும்பினால் செய்யவேண்டிய கட்டாயப் பயிற்சியாகும். ஒருவன் மனதினை கட்டுப்படுத்தி, ஏகாக்கிரப்படுத்த விரும்பினால் அவனிற்கு பிரணாயாமப் பயிற்சியும், சித்தியும் இன்றி அவனால் மனதினைச் சரியாகக் கட்டுப்படுத்த முடியாது. பிரணாயாமத்தில் சித்தியடையாமல் அட்டாங்க யோகத்தின் அடுத்த படிகளான பிரத்தியாகாரம், தாரணை, தியானம் போன்ற ராஜயோக சாதனைகளில் சித்தியுற முடியாது.

பிராணாயமத்தின் உயர் பயிற்சியில் தன்னிகரற்ற உயர் நிலையுடைய பயிற்சி ஸோஹம் சாதனையாகும். இது ஏன் தன்னிகரற்ற பயிற்சி என்பதற்கு தகுந்த காரணம் இருக்கிறது. சாதகன் தன்னுடைய சங்கல்ப சக்தியைப் பயன்படுத்தி தன்னுணர்வினை உயர் நிலைக்கு உயர்த்தி பிரம்மத்துடன் இணைக்கக்கூடிய பயிற்சி இதுவாகும். மற்றைய எந்தப் பயிற்சியும் இந்த சாதனையைப் போல் மனிதனுடைய உணர்ச்சியையும், சங்கல்பத்தினையும் பயன்படுத்துவதில்லை. இந்தக்காரணத்தினால்தான் இது பிராணாயமம் என்று சொல்லப்படாமல் ஹம்ஸ யோகம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் இது ஒரு தனியான யோக சாதனையாகவும் யோக சாஸ்த்திரத்தில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

மூச்சினை உள்ளிழுக்கும் போது "ஸோ" என்ற சப்தத்தையும், நிறுத்தும் போது "அ" என்று சப்தத்தையும் வெளிவிடும்போது "ஹம்" என்ற சப்தத்தினையும் வாயினால் ஒலியை ஏற்படுத்தாமல் மனதில் உருவாக்கி இந்தப் பயிற்சியினைச் செய்ய வேண்டும். இது அவனது சூக்ஷ்ம செவிக்கு மாத்திரம் கேட்க வேண்டும். இப்படிக் கேட்பதற்கு சாதகன் சிறிதும் சலனமில்லாத ஏகாக்கிர மனம் இருக்க வேண்டும். இந்த அவதானத்தைப் பெறுவதற்கு ஒரு சாதகன் தனது உள்மூச்சு, வெளிமூச்சு இரண்டிலும் இயற்கையான சுவாசத்தினை கவனமாக அவதானித்துப் பழகியிருக்க வேண்டும்.

ஸோஹம் என்ற சப்தம் அனாகத நாதமாகும். ஒருவன் நாத யோகப் பயிற்சியில் தீவிர மௌனத்தில் தனது உடலின் உட்புறத்தில் இருக்கும் சப்தங்களை கேட்டுப் பழகவேண்டும். ஹம்ஸ யோகத்தில் நாசியானது மேலும் இரண்டு புலன் உணர்வினைக் (நாசி, செவி) கொண்டு ஆழமான மன ஏகாக்கிரத்தின் மூலம் சூக்ஷ்ம நாதமாகிய ஸோஹம் என்பதை அறியும் பயிற்சியாக இந்த யோகம் விளங்குகிறது.(தொடரும்)

மூலம்:
பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா 
தமிழில்: ஸ்ரீ ஸக்திசுமனன் 


Add new comment

Or log in with...