பணி நீக்கப்பட்ட தொழிலாளருக்கு அநீதி இழைக்க இடமளிக்கலாகாது!

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்று நிலவிய காலப் பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் தொழிலில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களின் நலன் குறி த்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமையன்று கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கின்றார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சேவையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பாக இதுவரை 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த முறைப்பாடுகள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று உறுதியளித்திருக்கின்றார்.

அதேசமயம் தொழில் திணைக்களத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் எவராவது சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இம்முறைப்பாடுகள் விடயத்தில் தொழில் திணைக்களம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமென்ற தகவலையும் நிமல் சிறிபால டி சில்வா வழங்கியுள்ளார்.

இலங்கையில் கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலப் பகுதியில் இருந்து நாட்டில் நிலவி வருகின்ற நெருக்கடிகளில் தொழில்வாய்ப்புப் பிரச்சினையும் ஒன்றாகும்.

அரசாங்க நிறுவனங்களைப் பொறுத்த வரையில் அங்கு கடமையாற்றும் தொழிலாளர்களுக்கான தொழில் உத்தரவாதம் முழுமையாக உள்ளது. அரசாங்க ஊழியர்கள் பல மாதங்களாக தத்தமது வீடுகளில் முடங்கியிருந்த காலப் பகுதியிலும் கூட அவர்களுக்கான மாதாந்த சம்பளம் தடையின்றி வழங்கப்பட்டு வந்துள்ளது.

பாடசாலைகள் போன்ற பல அரசாங்க நிறுவனங்கள் இன்னமும் முழுமையாக பழைய நிலைமைக்கு வராத போதிலும், அவற்றைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத் தொழிலின் ஒரு வரப்பிரசாதமாகவே இதனைக் கருத முடிகின்றது.

ஆனால் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் நாட்டின் முடக்க நிலைமையின் போது பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைமையில் பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்ததன் காரணமாக அவற்றால் வருமானத்தை ஈட்ட முடியாமல் போனது.

அந்நிறுவனங்கள் மூடப்பட்டதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்த பரிதாபம் ஏற்பட்டது. அத்தொழிலாளர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் கொரோனா முடக்க காலப் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் அன்றாட உணவுக்கே வழியின்றி சிரமத்துக்கு உள்ளான செய்திகளையும் நாம் அறிந்துள்ளோம்.

இந்த விடயத்தில் வருமானம் இழந்து போன தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதென்றாலும் கூட, தனியார் நிறுவனங்களின் மீது நாம் முற்றுமுழுதாக குற்றம் சுமத்தி விடவும் முடியாது. பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு குறைந்த தொகை சம்பளத்தையாவது வழங்கின. ஆனால் அன்றாடம் சிறிய வருமானத்தில் இயங்கி வந்த சிறிய நிறுவனங்களால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது.

நிறுவனங்கள் வருமானமின்றி கையை விரித்துக் கொண்டதனால் நாட்டில் தொழில் இழந்து போனோரின் தொகை அதிகமாகும். சுற்றுலாத் துறை சார்ந்த தொழில் துறைகளில் பணி செய்தோரும் இவர்களில் அடங்குகின்றனர். இப்போதுதான் அவர்கள் ஒவ்வொருவரும் படிப்படியாக ஏதேனுமொரு தொழில்களைப் பெற்று வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய பெரும் பாதிப்பு இதுவாகும்.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகின்றது. கொவிட்19 இடர்கால வருமான இழப்பினால் தனியார் நிறுவனங்கள் பல மூடப்பட்டமை அக்காலத்தில் தவிர்க்க முடியாததாக இருப்பினும், இன்று படிப்படியாக நிலைமை வழமைக்குத் திரும்பி வருவதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

அன்றைய காலப் பகுதியில் மூடப்பட்ட நிறுவனங்கள் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்குமானால், அங்கு முன்னர் பணியாற்றிய ஊழியர்களுக்கு இப்போது மீண்டும் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதுதான் நீதியாகும். கொரோனாவை காரணம் காட்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அந்நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கிய பின்னர் அந்ந ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதுதான் நியாயம் ஆகும். இந்த விடயத்தில் எங்காவது அநீதி இழைக்கப்படுமானால் அரசாங்கம் தாமதமின்றி தலையீடு செய்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.


Add new comment

Or log in with...