கொரோனா ஏற்படுத்திய அச்சம்: உலகில் பலரை உபத்திரவம் செய்கின்ற உளப் பாதிப்பு! | தினகரன்

கொரோனா ஏற்படுத்திய அச்சம்: உலகில் பலரை உபத்திரவம் செய்கின்ற உளப் பாதிப்பு!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டிருந்தாலும், அதன் உளப் பாதிப்பு அவர்களை விட்டு உடனடியாக சென்று விடாது. ஏனெனில் கொவிட்19 மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் சீர்குலைத்துள்ளது.

கொவிட்19 இன் பல்வேறு அறிகுறிகளை, விளைவுகளை ஆய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள், மக்களின் கவலை மற்றும் மனஅழுத்த நிலைகளில் தொற்றுநோய்களின் தாக்கங்களை ஆய்வு செய்ய சிறிய அளவிலான ஆராய்ச்சி மட்டுமே நடத்தியுள்ளனர். கொரோனவால் மனதளவில் ஏற்படும் தாக்கம் என்ன, அதனை எப்படி தடுப்பது என்றும் பார்ப்பது அவசியம்.

இந்தக் காலகட்டத்தில் இருமல், சளி அல்லது காய்ச்சல் கொரோனாவின் அறிகுறியா, இல்லையா என்று அச்சமாக இருக்கும் போது, விஞ்ஞானிகள் 'கொரோனபோபியா' என்று அழைக்கப்படும் ஒரு வார்த்தையை உருவாக்கியுள்ளனர். இது குறிப்பாக கொவிட்19 தூண்டப்பட்ட விடயங்களுடன் தொடர்புடைய கவலையாகும்.

கொரோனாபோபியா என்றால் என்ன? போபியா என்பது வாழ்க்கை மற்றும் சூழ்நிலைகளின் வெவ்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய பயத்தின் நிலை. இதே போல், கொரோனாபோபியா என்பது ஒரு புதிய வகை ஃபோபியா ஆகும். இது குறிப்பாக கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல ஆய்வுகளை கவனித்த விஞ்ஞானிகள், கொரோனாபோபியாவை பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.

உடலியல் அறிகுறிகள் மீது அதிக அக்கறை, தனிப்பட்ட மற்றும் தொழில் இழப்பு குறித்த குறிப்பிடத்தக்க மனஅழுத்தம், அதிகரித்த உறுதி மற்றும் பாதுகாப்பு நடத்தைகளைத் தேடுவது, பொது இடங்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பது, அன்றாட வாழ்க்கை செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைபாடு போன்றவற்றால் வருகின்ற உடல் பாதிப்பு இதுவாகும்.

ஒரு ஆய்வின்படி, கொவிட்-19 இன் ஆபத்திலிருந்து வெளிவரும் பதற்றத்தின் மூன்று முக்கிய குணாதிசயங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி கொரோனாபோபியாவின் அறிகுறிகள் என்னவெனில் இதயத் துடிப்பு, பசியின்மை மற்றும் தலைச்சுற்றல் போன்றனவாகும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி உறக்கமின்மை, மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற அறிகுறிகள் ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்பட்டன. ஆண்களை விட பெண்கள் கவலைக்கு ஆளாகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்படுவது அல்லது தங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் என்பன போன்ற கவலைகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக இளைஞர்களுக்கு பதற்றம் அதிகரித்து வருவதையும் மருத்துவர்கள் அவதானித்துள்ளனர். தடுப்பூசி ஏற்றி விட்டால் பதற்றம் கொஞ்சம் குறைந்து விடலாம். தடுப்பூசி எல்லோருக்கும் போடாததால் பயமும், பதற்றமும் இன்னும் நம் தலைக்கு மேல் உள்ளன. சுய கட்டுப்பாடு மற்றும் அமைதியான உணர்வைப் பேணுவதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் பதற்றத்தை தணிக்க வேண்டும்.


Add new comment

Or log in with...