நீர்க்குழாய் அமைப்பு துறையில் தொழில்நுட்பவியல் பயிற்சி | தினகரன்

நீர்க்குழாய் அமைப்பு துறையில் தொழில்நுட்பவியல் பயிற்சி

தேசத்தின் நீர்க் குழாய் அமைப்புத் துறைசார் தொழில்நுட்பவியலாளர்களுக்கு பயிற்சியளித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற தரச்சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டமொன்று செயல்படுத்தப்படவுள்ளது.

திறன்அபிவிருத்தி தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொலவின் சிந்தனையின் பிரகாரம் இதற்கான விஷேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பிரகாரம் அமைச்சின் கீழ் வரும் தேசிய பயிலுனர் தொழில் பயிற்சி அதிகார சபைக்கும் பிரபல நீர்க்குழாய் நிறுவனமான ‘எஸ்லோன்’ தனியார் நிறுவனத்துக்கும் இடையில் துறைசார் பயிற்சி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இன்று சமூகத்தில் பல்வகை துறைகளில் சிறந்த துறைசார் தொழில்நுட்பவியலாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் குறிப்பிட்ட துறையில் முறையான சான்றிதழ் பெறாத நிலைமைதான் காணப்படுகின்றது. இராஜாங்க அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான வேலைத் திட்டத்தின் கீழ் ‘எஸ்லோன்’ நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்படும் நீர்க்குழாய் தொழில்நுட்பவியலாளர்களுக்கு குறிப்பிட்ட துறையில் முறையான சான்றிதழ் வழங்கப்படும். குறிப்பிட்ட நிறுவனத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இன்றைய தொழிற் சந்தையின் தேவைக்கு ஏற்றவாறு நீர்க்குழாய் அமைப்புத் துறையில் சிறந்த பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குவதும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற முறையான சான்றிதழ் வழங்குவதும் இந்த வேலைத் திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இராஜாங்க அமைச்சரின் பங்களிப்புடன் தேசிய பயிலுனர் தொழிற் பயிற்சி அதிகார சபையில் இடம்பெற்றது. அதிகார சபையின் தலைவர் டீ.நளீன் கம்லத் மற்றும் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவன குறூப் பணிப்பாளர் எஸ்.ஸீ.வீரசேகர ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த வேலைத் திட்டத்தின் மூலம் தற்போது நீர்க்குழாய் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் இத்துறையில் ஈடுபட எதிர்பார்த்திருப்போர்களுக்கு சமூகத்தில் தொழில் கௌரவம் மற்றும் அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜாங்க அமைச்சர் சீதாஅரம்பேபொலவின் சிந்தனையின் பிரகாரம், எதிர்காலத்தில் குறிப்பிட்ட துறையில் அங்கீகாரம் பெற்ற தொழில்வாய்ப்புகள் உருவாக வழி உதயமாகும்.

எம்.எஸ்.எம்.முன்தஸிர்
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...