சிறுபோக நெற்செய்கை; பங்குனியில் ஆரம்பம் | தினகரன்

சிறுபோக நெற்செய்கை; பங்குனியில் ஆரம்பம்

- மட்டு. மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் தீர்மானம்

மட்டக்களப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்வரும் பங்குனி மாதத்தில் ஆரம்பிக்க மாவட்ட செயலகத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இம்முறை செய்கை பண்ணப்படவுள்ள சிறுபோக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்தப்படவுள்ளதாக இதன்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உன்னிச்சை மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் எதிர்வரும் 04 ஆம் திகதியும், உறுகாமம் கித்துள்வெவ, வெலிகாகண்டி மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், அன்றைய தினம் பி.ப. 2.00 மணிக்கு செங்கலடி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.

கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல் குளம் மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும், நவகிரி, தும்பங்கேணி மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 6 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு கலாசார மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.

இம்முறை செய்கை பண்ணப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான நீர் விடுவிப்பு, உழவு நடவடிக்கை, கால்நடைகளை அகற்றுதல், விதைப்பு தினம் போன்ற திகதிகள் விவசாய ஆரம்பக் கூட்டங்களில் தீர்மானிக்கப்படவுள்ளன.

மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஹலீஸ், காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என். நாகரெத்தினம், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

வெல்லாவெளி தினகரன், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...