தமிழ் அரசியல்வாதிகள் பேதங்களை மறந்து ஒன்றுகூடிப் பேச வேண்டும் | தினகரன்

தமிழ் அரசியல்வாதிகள் பேதங்களை மறந்து ஒன்றுகூடிப் பேச வேண்டும்

‘தமிழ் அரசியல்வாதிகளான நாம் அனைவரும் பிரதேச, மத, அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுகூடிப் பேச  வேண்டும்’ என்று அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.கட்சிஅமைப்பாளர் ஜெயச்சந்திரன் கூறுகிறார்.

‘தமிழ்ப் பிரதேசங்களில் நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. சுருங்கிக் கொண்டு வரும் தமிழ்க் கிராமங்களையிட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவை பாதுகாக்கப்படும். எனவே நாம் மக்கள் பிரச்சினைகளில் ஒன்றுபட வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். 

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வெள்ளி ஜெயச்சந்திரன் தினகரனுக்காக பேட்டி அளித்தார்.

ஜெயச்சந்திரன் 2018.02.10ஆம் திகதி நடைபெற்ற சம்மாந்துறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சி சார்பாக போட்டியிட்டு 1032வாக்குகளைப் பெற்று உறுப்பினரானார். அன்றைய களநிலைவரப்படி ஸ்ரீல.சு.கட்சியின் ஆதரவு ஆட்சியமைக்க தேவைப்பட்டதால் அவர் கட்சியால் உபதவிசாளராக நியமிக்கப்பட்டார்.

அத்தருணம் இணங்கிக் கொண்டதற்கமைவாக இரு வருடங்களின் பின்னர் தனது சகஉறுப்பினரான அச்சிமொகமட்டிற்கு தனது உபதவிசாளர் பதவியை இராஜினாமா செய்து, 2020.02.11ஆம் திகதி மனச்சாட்சிப்படி ஒப்படைத்து விட்டு உறுப்பினராகப் பணியைத் தொடர்ந்தார். இந்நிலையில் தன்னுடன் தனது ஊரில் இணைந்து தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாக நின்ற திருமதி தவசீலன் குலமணிக்கு தனது உறுப்பினர் பதவியை மனச்சாட்சிப்படி ஒப்படைப்பதற்காக கடந்த 10ஆம் திகதி அவர் இராஜினாமா செய்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளரான வி.ஜெயச்சந்திரன் அவரது சேவைக் காலத்தில் பல கோடி ரூபாக்களில் தமிழ்ப் பிரதேசங்களில் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டவர்.  அவரது முயற்சியினால் தற்போது மல்வத்தை கோயில் வீதிக்கு 1கோடி ரூபா பெறுமதியான எல்.ஈ.டி  மின்குமிழ்கள் பொருத்தப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் சு.கட்சியைச் சேர்ந்தவர். மக்களுக்கு எவ்வாறான சேவைகள் செய்துள்ளீர்கள்?

பதில்: சுமார் 13கோடி ரூபாவை அபிவிருத்திக்காக கொண்டு வந்துள்ளேன்.  அமைச்சர்கள், எம்.பிக்கள், ஆளுநர் என பல தரப்புகளிடம் சென்று அணுகி மேற்படி தொகையை பெற்று இப்பிரதேசமெங்கும் விளம்பரமில்லாமல் அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளேன். அதை விட மல்வத்தை வைத்தியசாலை தரமுயர்த்தல் போன்ற பணிகளையும் செய்துள்ளேன். மல்வத்தை சந்தை, வீதிகள் அபிவிருத்தி, மலசலகூடங்கள், வாழ்வாதார உதவிகள், புளொக் கல் வெட்டும் இயந்திரங்கள், தண்ணீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். பல தரப்பட்ட சேவைகளை மல்வத்தை, வளத்தாப்பிட்டி, வீரமுனை, காரைதீவு, நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் செய்துள்ளேன். பளவெளி சிவன் ஆலயத்திற்கு இதுவரை 1கோடி 40இலட்ச ரூபாவைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் இரண்டு வகுப்பறைக் கட்டடத்தை கட்டிக் கொடுத்துள்ளேன்.

கேள்வி: ஜனாதிபதியின் 1இலட்சம் வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே?

பதில்: நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவன். அதற்கான சந்தர்ப்பம் எமக்கு வழங்கப்படவில்லை.

கேள்வி: பொத்துவில்- பொலிகண்டி பேரணி பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: அது அவசியமானதொன்று. வரவேற்கிறேன். தமிழர் பிரச்சினைகள் நியாயமான அமைதிப் போராட்டத்தின் மூலம் வெல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கேள்வி: மேய்ச்சல்தரை விவகாரத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: பெரும்பான்மையினத்தவர் எப்போதும் ஆக்கிரமிப்பிலே முனைப்புக் காட்டி வருகிறார்கள். காணி ஆக்கிரமிப்பு ஆரோக்கியமானதல்ல.

கேள்வி: உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளீர்கள். உங்கள் பணி தொடருமா?

பதில்: நிச்சயமாக...மனசாட்சிக்கு விசுவாசமாக எனது பதவியை எவ்வித அழுத்தங்களுமில்லாமல் நானாகவே ஒப்படைத்தேன். எனக்கு அது மகிழ்ச்சி, திருப்தி. 

கேள்வி:  மல்வத்தையை மையமாக வைத்து மற்றுமொரு பிரதேசசபை உருவாவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அதிகாரப் பங்கீட்டுக்கு ஆதரவானவன் நான். ஏற்கனவே சம்மாந்துறையிலிருந்து இறக்காமம், நாவிதன்வெளி பிரித்துக் கொடுக்கப்பட்டது. எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற பிரதேசசபை அவசியமென்றால் அதனை வழங்குவதில் தவறில்லை. மல்வத்தையை மையமாகக் கொண்ட 3கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட தனியான சபை உருவாவதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளேன்.

நேர்காணல்:
வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...