கொவிட் மரண உடல்களை அடக்க அனுமதி! (UPDATE)

கொவிட் மரண உடல்களை அடக்க அனுமதி!-Bodies of the COVID19 Victims Burial Will be Allowed-Pavithra Wanniarachchi

- தொழில்நுட்ப நிபுணர் குழு பரிந்துரை
- திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியீடு

கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, தொழில்நுட்ப நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளதாக, சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஆளும்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக, அமைச்சர், எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று காரணமாக, கடந்த மார்ச் 28 முதல் இதுவரை 459 பேர் மரணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சரால் ஏற்கனவே 2020 ஏப்ரல் 11 திகதியிடப்பட்ட 2170/8 எனும் அரசாங்க வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்கள் அனைவரும் தகனம் செய்யப்பட்டு வந்துள்ளனர்.

அதன் அடிப்படையில், குறித்த வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யும் வகையில், சுகாதார அமைச்சரினால் தற்போது புதிய அதி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. (பக்கத்தின் அடியில்)

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பினால் வழிகாட்டப்பட்ட பரிந்துரைகளுக்கமைய, உலகிலுள்ள ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும் கொவிட்-19 தொற்று காரணமாக மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதன் காரணமாக, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட வெவ்வேறு மத மற்றும் கலாசாரங்களை பின்பற்றுவோர் தங்களது, இன, மத, கலாசார உரிமைகளுக்கமையவும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு அமைய, தங்களது உறவினர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்திருந்ததோடு, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

அந்த வகையில், இவ்விடயத்தை ஆராய சுகாதார அமைச்சரினால் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நிலத்தடி நீர் மூலம் கொவிட்-19 பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து, அடக்கம் செய்வதற்கான அனுமதியை மறுத்திருந்தது.

ஆயினும் பின்னர் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு, உரிய வழிகாட்டல்கள், பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணி, உடல்களை அடக்க அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில், எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு, கொவிட்-19 உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 உடல் அடக்கம் செய்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி வருமாறு

PDF File: 

Add new comment

Or log in with...