ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்து சு.க. தீர்மானம் நிறைவேற்றம்

ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்து சு.க. தீர்மானம் நிறைவேற்றம்-SLFP Executive Committee Rejects Easter Sunday Attack PCoI Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை நிராகரித்து, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (25) பிற்பகல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில், தலைவராக மைத்திரிபால சிறிசேன எம்.பியும், பொதுச் செயலாளராக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இவ்வாணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், குறித்த தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்ட நிலையிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் குறித்த தாக்குதல் சம்பவ தினத்தில் வெளிநாடு சென்றிருந்ததோடு, தனது பாதுகாப்பு அமைச்சுக்கு பதில் அமைச்சர் ஒருவரை நியமிக்கத் தவறியதன் மூலம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குறித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றையதினம் (25) சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர கையளித்தார்.


Add new comment

Or log in with...