முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் காலத்தில் சதொச நிறுவனத்திற்கு 28 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இங்கு பாரிய ஊழல்களும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் சதொசவுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். சதொசவுக்கு இழப்புகள் ஏற்படாத வகையிலேயே குறித்த 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் காலத்தில் சதொச நிறுவனத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருந்தன. 2015ஆம் ஆண்டு மாத்திரம் 1.9 பில்லியன் இழப்பு சதொசவுக்கு ஏற்பட்டிருந்தது. 2016 இல் 5.1 பில்லியனும், 2017இல் 2.8 பில்லியனும் 2019இல் 3.2 பில்லியனும் நட்டம் ஏற்பட்டிருந்தது. 2020இல் அதனை 1.2 பில்லியனாக நாம் குறைத்துள்ளோம்.
20 பில்லியனுக்கும் அதிகமாக நிதியை நட்டம் ஏற்படுத்தியுள்ளனர். அதேபோன்று வழங்குநர்களுக்கு 8 பில்லியன்வரை நிதி செலுத்த வேண்டியுள்ளது.
ஆகவே, 28 பில்லியன் நிதியை சதொசவில் நாசமாக்கியவர்கள்தான் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி பேசுகின்றனர்.
எமது அரசாங்கம் அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
Add new comment