அச்சுறுத்தல்கள் வரினும் போராட்டங்கள் தொடரும் | தினகரன்

அச்சுறுத்தல்கள் வரினும் போராட்டங்கள் தொடரும்

காணாமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர்

வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் திங்கட்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் அமெரிக்க தூதுவர் நாளையதினம் யாழ்பாணம் வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், இவ்வாறான அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். நாம் மேற்கொண்டுவரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பாக அவர்கள் கேட்டறிந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் இருந்து நடைப்பயணமாக வந்தீர்களா என கேட்டிருந்தனர். பலவருடங்களாக போராடிவரும் நிலையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் இலங்கை அரசுமீது நம்பிக்கை இழந்துள்ள நாம் எமக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளதாக அவர்களிடம் தெரிவித்திருந்தேன்.

போராட்டங்களிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகின்றதா என அவர்கள் கேட்டிருந்தனர். நாங்கள் நீதியை மாத்திரமே எதிர்பார்த்து நிற்கின்றோம், நிதியை அல்ல. என்ற விடயத்தினை அவர்களிற்கு உறுதியாக கூறியிருந்தேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...