இரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தார் பாகிஸ்தான் பிரதமர் | தினகரன்

இரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தார் பாகிஸ்தான் பிரதமர்

ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

 விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு

 பிரதமருடன் நேற்று விசேட கலந்துரையாடல்

 புரிந்துணர்வு உடன்படிக்ைககள் கைச்சாத்து

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று நாட்டை வந்தடைந்தார். மாலை நான்கு மணியளவில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பிரதமர் இம்ரான்கானுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மகத்தான வரவேற்பளித்து வரவேற்றார்.

இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை பலப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் அமைந்துள்ளதுடன்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டு தலைவராக இம்ரான் கான் வரலாற்றில் இடம் பெறுகின்றார்.

பாகிஸ்தான் பிரதமரை கௌரவிக்கும் வகையில் விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு தினங்கள் இலங்கையில் தங்கி இருப்பதுடன் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இரு நாட்டினதும் பிரதமர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிடையில் அலரிமாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனை யடுத்து இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.

முக்கிய ராஜதந்திரமட்ட பேச்சு வார்த்தைகளுடன் பாதுகாப்பு, முதலீடு,வர்த்தகம், சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞான தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலும் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று ள்ளன.

பாகிஸ்தான் பிரதமருடன் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் மொகமட் குரேஷி உள்ளிட்ட 40 பேர் கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் வருகை தந்துள்ளது.

அந்தவகையில் மேற்படி துறைகள் சார்ந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளன.

இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளின் முன்னேற்றம் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்றைய தினம் பிற்பகல் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நாடு திரும்ப வுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...