பாகிஸ்தானில் பெண்கள் நால்வர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் குறைந்தது நான்கு பெண் அபிவிருத்திப் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதி முன்னர் பாகிஸ்தான் தலிபான்களின் தலைமையகமாக இருந்த இடமாகும்.

இப்பி என்ற கிராமத்திற்கு அருகில் நேற்றுக் காலை 9.30 மணி அளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக மூத்த பொலிஸ் அதிகாரியான சபியுல்லா கண்டபுர் தெரிவித்துள்ளார்.

இந்த பணியாளர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தின் மீது அங்கு வந்த தாக்குதல்தாரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“இது ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் கொண்ட பகுதி. இங்கு எல்லா பக்கமும் அபாயமானது” என்று கண்டபுர் தெரிவித்தார். பழங்குடி கலாசாரம் இருக்கும் இந்தப் பகுதியில் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவது ஏற்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல்தாரிகள் அருகில் இருக்கும் மலைப் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.


Add new comment

Or log in with...