மியன்மாரில் இதுவரை இல்லாத அளவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டதோடு இதுவரை இல்லாத பாரிய ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

தலைநகர் நைபிடோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வன்முறைகளில் உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றி மூன்று வாரங்கள் எட்டியபோதும் அங்கு தொடரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை போராட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தால் முடியாமல்போயுள்ளது.

பெப்ரவரி 1ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பை கைவிடும்படியும் கைது செய்யப்பட்டிருக்கும் ஆங் சான் சூச்சி மற்றும் ஜனநாயக முறையில் தேர்வான அரசின் மூத்த உறுப்பினர்களை விடுவிக்கும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சீனா எல்லையின் வடக்கு குன்று பகுதி தொடக்கம் மத்திய பிராந்தியமான இரவாடி நதி டெல்டா பகுதி மற்றும் தெற்கில் பன்ஹடில் வரை நரகங்கள் மற்றும் சிறு நகரங்கள் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

தலைநகரில் இராணுவத் தலைமையத்திற்கு அருகில் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைக்க பொலிஸ் தண்ணீர் பீச்சியடிக்கும் டிரக் வண்டி மற்றும் பல்வேறு வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் துரத்திப் பிடிக்க முயல்வதும் அதில் பதிவாகியுள்ளது.

“நாம் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் அவர்கள் எம்மை துரத்திப் பிடித்து கைது செய்கின்றனர்” என்று பெண் ஒருவர் பதிவிட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மண்டலேய் நகரில் கடந்த சனிக்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு அதற்கு முன் இளம் பெண் ஒருவர் தலையில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் இறுதி ஊர்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதோடு. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்ட நிலையில் பிரதான நகரான யங்கோனில் நேற்று பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பல மேற்குலக நாடுகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.


Add new comment

Or log in with...