உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு

உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு-Upul Tharanga Retired From International Cricket

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இதனை தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்குகளில் அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதில் அவர், அனைத்து நல்ல விடயங்களும் என்றோ ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும் என்ற வகையில், தனது 15 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இத்துடன் நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட தன் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

தற்போது 36 வயதான உபுல் தரங்க, 235 ஒருநாள் போட்டிகளில் 6,951 ஓட்டங்களையும், 31 டெஸ்ட் போட்டிகளில் 1,754 ஓட்டகளையும், 26 ரி20 போட்டிகளில் 407 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதல் போட்டியில் விளையாடிய உபுல் தரங்க, இறுதியாக கடந்த 20019ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தொடருக்கான குழாமில் இணைவதில் தசுன் ஷானகவுக்கு சிக்கல்

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் அணியுடன், தசுன் ஷானக செல்வது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு வீசா பெறுவது தொடர்பிலேயே குறித்த பிரச்சினை காணப்படுவதாகவும், காணாமல் போன அவரது கடவுச்சீட்டில் உரிய அமெரிக்க முத்திரை கொண்ட வீசா காணப்படுவதாகவும், அது தற்போது கைவசம் இல்லாமல் போனமையே அதற்கான காரணம் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உரிய அதிகாரிகளுடன் பேசி அதனை விரைவாக சீர் செய்து அவரை குழாமில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...