இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக டொம் மூடியை நியமிக்க பரிந்துரை | தினகரன்

இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக டொம் மூடியை நியமிக்க பரிந்துரை

இலங்கையின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் பயிற்றுநரான டொம் மூடி இலங்கை கிரிக்கெட் பணிப்பாளர் பதவியை ஏற்பதற்காக இலங்கை வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பதவிக்கு அவுஸ்திரேலியரான தோமஸ் மேசன் மூடியை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பயிற்றுவித்தல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், அபிவிருத்தி குழாம்கள், வயதுநிலை குழுக்கள், மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களது உடற்தகுதி உட்பட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புபட்ட சகல கிரிக்கெட் விடயங்களும் கிரிக்கெட் பணிப்பாளரின் கீழ் கொண்டுவரப்படும்.

இரண்டு தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற டொம் மூடியை கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கும் இறுதித் தீர்மானம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது.தலைமைப் பயிற்றுநர், பயிற்றுநர் குழாத்தின் தலைவர் ஆகியோரைவிட கிரிக்கெட் பணிப்பாளர் பதவி உயர்ந்தது. எனவே அவர் (டொம் மூடி) தனது அறிக்கைகைகளை கிரிக்கெட் குழுவுக்கு சமர்ப்பிப்பார். டொம் மூடியின் பயிற்றுவிப்பு காலத்தில் இலங்கை அணி 2007 உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. அத்துடன் இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றிந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இலங்கை முழுமையான (5 – 0) வெற்றியை ஈட்டியிருந்தது.இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஏற்கனவே பயிற்றுநர்களாக இருந்த முன்னாள் வீரர்களான ரங்கன ஹேரத், சம்பக்க ராமநாயக்க, ருவன் கல்பகே, மரியோ வெல்லவராயன் ஆகியோரையும் பயிற்றுநர்கள் குழாத்தில் இணைப்பதற்கு கிரிக்கெட் குழு பரிந்துரைக்கவுள்ளது.


Add new comment

Or log in with...