திருகோணமலை கால்பந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டம் | தினகரன்

திருகோணமலை கால்பந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டம்

திருகோணமலை கால்பந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டம் 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை (20) திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் அநுர டீ சில்வா மற்றும் இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளன நிதிக்குழுவின் தலைவரும், பிராந்திய உதைபந்தாட்ட பிரதித் தலைவரும். சிட்டி உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவருமான புவனேந்திரன் ஆகியோரின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்தில் லீக்கில் அங்கம் வகிக்கும் பதினாறு அணிகள் கலந்து கொண்டன. பதின்மூன்று அணிகள் வாக்களிக்கும் தகைமையை பெற்றிருந்தமையால் அவ்வணிகள் அனைத்தும் வாக்களிப்பில் ஈடுபட்டன. டரக் அன்ட் பீல்ட், பாலையூற்று மற்றும் டொல்பின் ஆகிய கழகங்கள் முதன்முறையாக இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையால் இவ்வருடம் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை. திருகோணமலை கால்பந்தாட்ட லீக்கின் யாப்புக்கு அமைவாக அடுத்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவ்வணிகளுக்கு வாக்குரிமை கிடைக்கவுள்ளது.

2001 முதல் தலைவராக செயற்பட்ட உபாலி ஹேவகே 2016 முதல் வேறு ஒரு லீக்கின் தலைவராக சென்றுள்ள நிலையில் திருகோணமலை கால்பந்தாட்ட வரலாற்றில் மிக நீண்ட கால செயலாளர் பதவியை வகித்த யோகராசா இப்பொதுக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளார். செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எஸ். சபீயுல்லா கிண்ணியா உதைபந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவராவார்.

நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தின் மூலம் திருகோணமலை லீக் எதிர்வரும் காலங்களில் மீண்டும் இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட லீகாக இயங்குவதற்கான வாய்ப்பைபெற்றுள்ளது.

எதிர்காலத்தில் திருகோணமலையில் வீழ்ச்சியடைந்துள்ள உதைபந்தாட்டத் துறையை மேம்படுத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு பதிய நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தில் 2020/2021 வருடத்துக்கான பின்வரும் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர்- – ஜீ.சரவணபவன், 7 உப தலைவர்கள் – ஏ.அகிலன், ரீ.சிவராஜா, ஏ.முனாஸ், ஏ.கிஷான், எம்.ஐ.எம. நஸீர், எச்.ஆர்.எம். றசீன் சேம் ஜயதேவ், செயலாளர்– எம்.எஸ். சபீயுல்லா, உதவிச் செயலாளர்– ஆர் கியூ.ஜெரோம், பொருளாளர் – கே.கமலன்.

திருகோணமலை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...