311ஆவது வாரமாக ‘முதல்’ இடம்; பெடரர் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார் | தினகரன்

311ஆவது வாரமாக ‘முதல்’ இடம்; பெடரர் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்

அவுஸ்திரேலிய பகிரங்க பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார்.

கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போன் நகரில் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் உலகில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 7--5, 6--2, 6--2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவை சேர்ந்த 4-ம் நிலை வீரரான மெட்வதேவை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றார்.

33 வயதான ஜோகோவிச் அவுஸ்திரேலிய பகிரங்க பட்டத்தை 9-வது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன்பு 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தார்.

அவர் 9 முறை இறுதிப்போட்டிக்கு வந்து அனைத்திலும் பட்டம் வென்று சாதித்து உள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தனக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். ஜோகோவிச் கைப்பற்றிய 18-வது கிராண்ட்சலம் பட்டம் இதுவாகும். இதன்மூலம் அவர் முதல் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரை நெருங்கி உள்ளார்.

இருவரும் 20 கிராண்ட்சலம் பட்டங்களை வென்று உள்ளார். அவர்கள் நிலையை அடைய ஜோகோவிச்சுக்கு இன்னும் 2 கிராண்ட்சலம் பட்டங்களே தேவை.

அவர் அவுஸ்திரேலிய பகிரங்கத்தை 9 முறையும், பிரெஞ்சு பகிரங்கத்தை ஒரு தடவையும், விம்பிள்டன் பட்டத்தை 5 முறையும், அமெரிக்க பகிரத்தை 3 முறையும் வென்று உள்ளார்.

அவுஸ்திரேலிய பகிரங்க பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் 311-வது வாரமாக முதல் 1 வரிசையில் உள்ளார்.

இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார். பெடரர் 310 வாரங்கள் டென்னிஸ் தர வரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.


Add new comment

Or log in with...