பொத்துவில் - பொலிகண்டி: சுமந்திரன் எம்.பியிடம் பொலிஸார் வாக்கு மூலம் | தினகரன்

பொத்துவில் - பொலிகண்டி: சுமந்திரன் எம்.பியிடம் பொலிஸார் வாக்கு மூலம்

கொழும்பு அலுவலகத்தில் நேற்று பதிவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.  கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து  நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரெழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் கடந்த 3ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகிய போராட்டம் பல்வேறு தடைகளின் பின்னர், கடந்த 7ஆம் திகதி பொலிகண்டியைச் சென்றடைந்தது.

இதனையடுத்து, சட்டத்தை மீறி பேரணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக 'பி' அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பலரிடம் இந்த பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...