விழிப்புணர்வை அதிகரித்து புற்றுநோயை வெல்வோம்! | தினகரன்

விழிப்புணர்வை அதிகரித்து புற்றுநோயை வெல்வோம்!

-மருதமுனையில் சைக்கிள் சவாரி

உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு பெப்ரவரி மாதம் உலக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சர்வதேச ரீதியிலும், எமது நாட்டிலும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் பொதுமக்களின் பொதுச்சுகாதாரம், தோற்றா நோய்கள், விழிப்புணர்வு போன்ற செயற்பாடுகளை 'ரைடர்ஸ் கப்' 'சைக்கிள் சவாரி கழகம்' கடந்த மூன்று வருடங்களாக முன்னின்று செயற்படுத்தி வருகின்றது.

‘உடல் ஆரோக்கியத்துக்கு தினமும் காலையில் சைக்கிள் சவாரி செய்வோம்’ எனும் குறிக்கோளோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த சைக்கிள் சவாரி கழகம் இன்று பல அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கின்றது. தற்போது இதன் தலைவராக கலீல் கபூர் செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் உலக புற்றுநோய் தடுப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு வீதிச் சைக்கிள் சவாரி கழக ஸ்தாபகர்களில் ஒருவரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான டொக்டர்.ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை இந்த தினம் குறிக்கிறது. 1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை ஆரம்பித்தது. உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து பரப்புவதற்கான முயற்சிகளில் பல சர்வதேச நிறுவனங்கள் இதனை ஆதரித்து வருகின்றன.

உலகை அச்சுறுத்தும் நோயாக பார்க்கப்படும் புற்றுநோயின் பாதிப்பு அளவு ஒவ்வொரு வருடமும் 1 சதவீதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த புற்றுநோயின் பாதிப்பு, தற்போது 90 முதல்100 பேராக அதிகரித்துள்ளது.

சரியான விழிப்புணர்வு, சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இருந்தால் புற்றுநோயைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது உள்ள மருத்துவ முன்னேற்றத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை முற்றிலுமாக குணப்படுத்தலாம். உரிய நேரத்தில் சரியாக சிகிச்சை பெறும் 65 சதவீதமானோர் காப்பாற்றப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் கோளாறுகளின் அறிகுறியை அலட்சியம் செய்யாமல் நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

புகைபிடித்தல், தவறான உணவுப் பழக்கம், குடும்ப வழியாக வரும் பாதிப்பு என புற்றுநோய்க்கான காரணங்கள் பல்வேறாகக் கூறப்பட்டாலும் சரியான விழிப்புணர்வு, முறையான மருத்துவ ஆலோசனை இருந்தால் புற்றுநோயை வெல்லலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாகும்

ஒவ்வொரு வருடமும் ஒரு தொனிப்பொருளின் அடிப்படையில் உலக புற்றுநோய் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. புற்றுநோய் சுமையை எதிர்த்து என்னால் போராட முடியும். நம் அனைவராலும் போராட முடியும் என்பது பொதுவான கருத்தாகும். எனவே, புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கவும், ஆரம்ப கால நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையின் சவால்களை சமாளிக்கவும் நம்மால் முடியும். அதன்படி 2021 இன் தொனிப்பொருள் ‘புற்றுநோயை எதிர்த்து, இந்த போரில் வெற்றி பெறுவதற்கான திறனைக் நான் கொண்டுள்ளேன்’ என்பதாகும்.

புற்றுநோய் அனைவரையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றது. இலங்கையில் நாள் ஒன்றுக்கு 6 -7 பேர் வரை மார்பக புற்று நோயாளிகளாக புதிதாக இனங்காணப்படுகின்றனர். 45 முதல் 60 வயது வரையான பெண்களே பெரும்பாலும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் 'புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக அண்மைக் காலமாக சிறுவர்கள் மத்தியில் புற்றுநோய் அபாயம் அதிகரித்துக் காணப்படுகின்றது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயாளர்களின் மரண எண்ணிக்கையில் கூடுதலானவை வாய்ப் புற்றுநோய் மரணங்கள். ஆகும் இதற்கு ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புகைத்தல், வெற்றிலை , பாக்கு, புகையிலை உட்கொள்ளல் போன்ற பழக்கமுடையவர்கள் மத்தியில்தான் இந்த வாய்ப்புற்று நோய் அதிகம் காணப்படுகிறது. அத்துடன் வாய்ச் சுகாதாரம் சரியான முறையில் பேணப்படாமையும் இந்நோய்க்குரிய மற்றுமோர் காரணியாகும். மார்பகப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் நம் நாட்டில் அதிகம். புற்றுநோயைப் பொறுத்த வரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம்.

அனைத்து மக்களும் புற்றுநோய்க்கு எதிராக தனிநபராகவோ, குழுவாகவோ அல்லது சமூகமாகவோ பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே ‘புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவோம்’ என ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.


Add new comment

Or log in with...