ஆழ்கடலில் மூன்று நாட்கள் இரவு பகல் கடற்படை பயிற்சி | தினகரன்

ஆழ்கடலில் மூன்று நாட்கள் இரவு பகல் கடற்படை பயிற்சி

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  வகையில், கொழும்பு கடற்பரப்பில் 60 கடல் மைல்  தூரம் வரை கப்பல்கள், ஹெலிகள் சகிதம்  இடம்பெற்ற பாரிய ஒத்திகைப் பயிற்சி

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடல், தயார்படுத்தல், ஒத்திகைகளில் ஈடுபடல் போன்றன அனைத்து துறைகளுக்கும் மிக இன்றியமையாத ஒன்றாகும். இவற்றின் மூலமே அத்துறை சார்ந்தோர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் தங்கு தடையின்றி வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிகின்றது.

முப்படைகளைப் பொறுத்த வரை பயிற்சி என்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் மிக முக்கியமான ஒன்றாகும். அவை காலத்திற்குக் காலம் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தரைவழி பயிற்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையே கடல் வழி மற்றும் வான்வழி பயிற்சிகளாகக் காணப்படுகின்றன. இவ்வாறான பயிற்சியை முன்னெடுப்பது என்பது மிகவும் இலகுவான காரியமுமல்ல.

இந்நிலையிலேயே அண்மையில் எமது நாட்டின் மேல் மாகாணத்தை அண்டிய கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த ‘கொனெக்ஸ்’ என்றழைக்கப்படும் கொழும்பு கடற்படைப் பயிற்சி – 2021ஐ (Colombo Naval Exercise -2021' (CONEX -21) அமைந்திருந்தது.

இலங்கை, இந்து சமுத்திரத்தின் நித்திலம் என்று கூறப்படுவதன் மூலம் இலங்கை மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்பின் முக்கியத்துவத்தையும் இலங்கை கடற்படையின் தேவையையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

எமது நாடு இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ளதால் கடல்சார் நடவடிக்கை மிக முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. உலகின் அதிகமான வர்த்தகக் கப்பல்கள் எமது பிராந்தியத்தின் ஊடாகவே செல்கின்றன. எமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் இந்தக் கப்பல்களை பாதுகாப்பதும், அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் எமது கடற்படையைச் சார்ந்ததாகும்.

எமது கடற் பிராந்தியத்திற்குள் வருகை தரும் எந்தவொரு கப்பலாக இருந்தாலும் அதன் பாதுகாப்பை உறுதிபடுத்துவதும் அனர்த்தங்கள், விபத்துக்கள் ஏற்படும் போது அதிலிருந்து பாதுகாத்து மீட்டெடுப்பது என்பதும் கடற்படையின் தலையாய கடமையாகும்.

இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கரை மற்றும் ஆழமான கடற்பரப்பில் ஏற்படும் அனர்த்தங்களுக்கு உதவுதல், இங்கு காணப்படும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் கடற்படையின் பிரதான கடமைகளாகும்.

போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல், கடல்வழியை பயன்படுத்தி எமது தாய்நாட்டிற்குள் ஊடுருவுதல், கடல் பிராந்தியத்திற்குள் அத்துமீறுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடர் ரோந்து கடமைகளில் ஈடுபட்டு வரும் எமது இலங்கை கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது பலவிதமான மீட்புப் பணிகளை, மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமே.

இவ்வாறான நிலையில் தமது தொழில் மற்றும் துறைசார் திறமைகளை நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டியது அரசாங்கத்தினதும் கடற்படையினரினதும் பொறுப்பாகும். எனவேதான் தம்வசமுள்ள வளங்களை பயன்படுத்தி சகோதரப் படைகளின் ஒத்துழைப்புடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் பயிற்சி வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கொழும்பு கடற்படை பயிற்சி இம்முறை மூன்றாவது ஆண்டு இடம்பெற்றது.

இலங்கை கடற்படையினரிடம் உள்ள மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றான ‘சயுரல’ கப்பலில் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல்களின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக்கவின் பங்குபற்றுதலுடன் இந்த பயிற்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சி 10ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இம்முறை இந்த கூட்டுப் பயிற்சிக்காக மேல் மாகாணத்தை அண்டிய கடற் பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும். இதற்கமைய அங்குரார்ப்பணத்தை தொடர்ந்து இலங்கை கடற்படையினரிடம் உள்ள அனைத்து பிரதான கப்பல்களும் இந்த பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதுடன், இவை பயிற்சிக்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து ஆழ்கடலை நோக்கி கடந்த 07ஆம் திகதி புறப்பட்டுச் சென்றன.

கடற்படையினரிடமுள்ள 'சயுரல', 'சயுர', 'சிந்துரல', 'சமுதுர' என்ற 04 ஆழ்கடல் ரோந்து கப்பல்களும், 'சுரணிமல', 'நந்திமித்ர' என்ற 02 அதிவேக தாக்குதல் கப்பல்களும், 'மிஹிகத', 'ரத்னதீப', என்ற 02 கரையோர ரோந்து கப்பல்களும், 'உதார' என்ற வேக தாக்குதல் படகும், எட்டு அதிவேக தாக்குதல் படகுகளும் நான்கு புலோடிள்ளா ரக தாக்குதல் படகுகளும் இந்த கடற்படை பயிற்சியில் பங்குபற்றின.

இவை தவிர இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 'சுரக்ஷா', 'சமுந்துராரக்ஷா' மற்றும் 'சமாரக்ஷா' என்ற 03 கப்பல்களும் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ 17, பெல் 412 மற்றும் பெல் 212 ஹெலிகொப்டர்களும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பி-200 ரக விமானமும் இம்முறை பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றி தமது ஒத்துழைப்புக்களையும் வழங்கின.

கடந்த 07ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற அனைத்து கப்பல்களும் கொழும்பு கடற்பரப்பிலிருந்து சுமார் 12 கடல் மைல் (சுமார் 22 கிலோ மீற்றர்) தூரத்தை சென்றடைந்ததும், 08ஆம் திகதி தொடக்கம் தமது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஆரம்பித்தன. படிப்படியாக இந்த பயிற்சி நடவடிக்கைகள் சுமார் 60 கடல் மைல் (சுமார் 111 கிலோ மீற்றர்) தூரம் வரை அதாவது நீர்கொழும்பு கடற்பரப்பு வரை கொண்டுச் செல்லப்பட்டன.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி ஒன்றிணைந்த கூட்டுப் பயிற்சியானது, கடற்படை வசமுள்ள பிரிவுகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தல், எந்தவொரு சந்தர்ப்பங்களுக்கும் முகம் கொடுத்தல் மற்றும் எந்தவொரு கடல்சார் நடவடிக்கைகளுக்காக கப்பல்கள் மற்றும் கடற்படை வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

கடல்சார் சூழலில் முன்னெடுக்கப்படும் சாதாரண மற்றும் அவசர மீட்பு நடவடிக்கைகளின் போது விமானப் படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் ஒத்துழைப்பைப் பெற்று ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் போது கையாளப்பட்டமை விஷேட அம்சமாகும்.

கடலில் சென்று கொண்டிருக்கும் போதே அவசர தேவைக்காக பொருட்களை மற்றைய கப்பலுக்கு மாற்றுதல், எண்ணெய்க் கசிவு ஏற்படும் சந்தர்ப்பம் ஒன்றின் போது எடுக்கப்பட வேண்டிய மாற்று நடவடிக்கை, அனர்த்தத்தில் சிக்கிய கப்பல் மற்றும் நபர்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுத்தல் போன்ற பயிற்சிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பனாமா நாட்டு கொடியுடன் வந்த ‘நியு டயமன்ட்’ என்ற பாரிய எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட பாரிய தீயை பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அணைத்த நடவடிக்கையின் போது கிடைக்கப் பெற்ற சில அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் திட்டமிட்ட அடிப்படையில் சில பயிற்சிகளும் இடம்பெற்றன.

அதேபோன்று கடலில் செல்லும் சந்தேகத்திற்கிடமான கப்பல்களை முற்றுகையிட்டு அந்தக் கப்பலுக்குள் பிரவேசித்து சந்தேக நபர்களை மடக்கிப் பிடிப்பது தொடர்பான ஒத்திகையும் இடம்பெற்றது. இதன் போது கடற்படைக் கப்பல்களுக்கு மேலதிகமாக விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் அழைக்கப்பட்டு குறித்த கப்பலுக்கு மேலாக பறந்த நிலையில் கயிறுகளை பயன்படுத்தி அந்த கப்பலுக்குள் குதித்து சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்தல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

ஆழ்கடலில் இரவு பகலாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பல்வேறு மட்டத்தில் இடம்பெற்ற இந்த பயிற்சி நடவடிக்கையின் இறுதி நாள் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையிலான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். கடற்படைத் தளபதி ஒருவர் கொழும்பு கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டது கடற்படை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

கடலில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப் பகுதியில் உலகின் 40இற்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்படையினர் கலந்து கொண்ட பாரிய கடற்படை பயிற்சி பாகிஸ்தானின் கராச்சி கடற்பரப்பில் இடம்பெற்றது. இந்த பயிற்சியிலும் இலங்கை கடற்படையின் ‘கஜபாகு’ என்ற கப்பல் வெற்றிகரமாக கலந்து கொண்டு தமது திறன்களை வெளிகாண்பித்தமை குறிப்பிடத்தக்கது.

எல்லா சந்தர்ப்பங்களிலும் எந்தவொரு நிலையிலும் கூட பயிற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த பயிற்சிகள்தான் எதிர்காலத்தில் உண்மையாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் வெற்றிக்கு பின்புலமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.-

ஸாதிக் ஷிஹான்...

Add new comment

Or log in with...