திண்மக்கழிவு முகாமைத்துவம்; புத்தளத்தில் வேலைத்திட்டங்கள் மும்முரமாக முன்னெடுப்பு

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நகருக்குள் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நகரிலிருந்து நாளாந்தம் சேகரிக்கப்படுகின்ற சுமார் 20டொன்னுக்கும் அதிகமான திண்மக்கழிவுகளிலிருந்து சுமார் 3டொன்னுக்கும் குறைவான கழிவுகள் மாத்திரமே சேதனப்பசளை தயாரிப்புக்காக பயன் படுத்தப்படுகின்றன.

மிகுதி கழிவுகள் வெறுமனே கிடங்கில் கொட்டப்படுகின்றன. அதனால் அங்கு வரும் பறவைகளும், விலங்குகளும் குப்பைகளை கிளறுவதால் ஏற்படும்  துர்நாற்றமும், கடதாசி, உலோகப்பொருட்கள் போன்றவற்றை அனுமதியின்றி சேகரிக்க வருவோர் வைக்கும் தீயினால் ஏற்படும் புகைமூட்டமும் அப்பிரதேச மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு சுகாதார சீர்கேடுகளும் நிலவி வந்தன.

1997ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கொட்டப்பட்ட திண்மக்கழிவுகள் இன்று மலை போல் குவிந்து காணப்படுகின்றது. இவற்றை அப்புறப்படுத்த அல்லது மீள் சுழற்சி செய்ய நகர சபையினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் நகர பிதா கே.ஏ. பாயிஸ்  விடுத்த வேண்டுகோளின் பேரில் புத்தளம் நகர சபைக்கு ஒத்துழைப்புக்களை  வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கி வருகின்ற UNOPS எனும் நிறுவனம் முன்வந்து கடந்த சில மாதங்களாக திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்காக பல காத்திரமான விடயங்களை மேற்கொண்டு வருகின்றது.

அதில் முக்கிய விடயமாக இவ்வளவு காலமாக கொட்டப்பட்டு வந்த குப்பைக்கிடங்கு பூரணமாக நிலச்சீர் செய்யப்பட்டு புதிய தொழில்நுட்பத்திற்கு அமைவாக நகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

(புத்தளம் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...