பளை, மருதங்கேணி பகுதிகளில் குடியேற விரும்புவோரிடம் விண்ணப்பம் கோரல் | தினகரன்

பளை, மருதங்கேணி பகுதிகளில் குடியேற விரும்புவோரிடம் விண்ணப்பம் கோரல்

யாழ். மாவட்டத்தில் இதுவரை 10,135 குடும்பங்கள் காணி கோரி பிரதேச செயலகங்களிடம் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பளை, மருதங்கேணி மற்றும் வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் குடியேற விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு பளை, மருதங்கேணி மற்றும் வடக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் காணி வழங்கி குடியேற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக காணி கோரி விண்ணப்பித்திருக்கும் 10,135குடும்பங்களிடம் குறித்த பிரதேசங்களில் குடியேறுவதற்கு தகுதியானவர்களிடம் சம்மதம் கோரப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேசத்தில் வழங்கப்படும் காணியில் குடியேற விருப்பமுள்ளவர்கள், பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்படும் காணிகளை தாமாக கொள்வனவு செய்து குடியேற இயலுமானவர்கள், பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் இருந்து அரசாங்கத்தால் கொள்வனவு செய்து வழங்கப்படும் காணியில் குடியேற விரும்புவோர் மற்றும் வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் குடியேற விருப்பம் தெரிவிப்போர் என நான்கு விதமாக பயனாளிகளிடம் இருந்து சம்மதம் கோரப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் நல்லூர், உடுவில்,கோப்பாய்,சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பிரதேச மக்கள் அதிகமாக காணி கோரி பிரதேச செயலகங்களிடம் விண்ணப்பங்கள் சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறித்த பிரதேசங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை யாழ் மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி விசேட நிருபர்


Add new comment

Or log in with...