கட்டாய தகனம்; இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தேசிய அமைப்பு ஏற்பாடு

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் , நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று செவ்வாய்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மாலை 03.00 மணிக்கு பலவந்த தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விஷேட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அண்மையில் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் அரசாங்கம் பலாத்காரமான முறையில் தகனம் செய்யும் முறையை மாத்திரமே கடைபிடித்து வருகின்றது. இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு பிற மதத்தவர்களின் சமய உரிமைகளை பின்பற்றும் உரிமை அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் எமது மத உரிரைமயை வென்றெடுப்பதற்கான எமது போராட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது, விஷேட நிபுணர் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்மொழிவுகளை அமுல்படுத்துமாறு கூறி அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.


Add new comment

Or log in with...