அதிக ஆபத்து பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிக்கு பதிய முடியும்

அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளான கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் உள்ளவர்களுக்கே தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை  குறித்த மாவட்டங்களில் பதிவானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

தடுப்பூசி பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது பட்டியல் எதுவும் இல்லை என்றும் தடுப்பூசி பெற தயாராக உள்ளவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வயதிற்கு மேற்பட்ட எவரும் சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் சென்று பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் பின்னர் தடுப்பூசி பெறுவதற்கான தகுதி குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தடுப்பூசியின் கையிருப்பு அளவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளும் மேலதிக தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பிற பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி மற்றுமொரு தொகுதி தடுப்பூசி இலங்கையை வந்தடையும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...