கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பாரூக் | தினகரன்

கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பாரூக்

-அரசியல் பயணத்தில் 57 வருடங்கள்

கேகாலை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரான யூ.எல்.எம் பாரூக் இம்மாதம் 16ஆம் திகதி தனது அரசியல் பயணத்தில் 57வது வருடத்தில் தடம் பதித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாரூக் 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி யூனுஸ் லெப்பை- பளீலா உம்மா தம்பதியினருக்கு மகனாக கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கன்னத்தோட்டை கிராமத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கராகொடை முஸ்லிம் மகாவித்தியாலயம் மற்றும் கன்னத்தோட்டை சுலைமானியா கல்லூரியில் கற்ற அவர் உயர் கல்வியை சிங்கள மொழி மூல பாடசாலையான முஹுதுகமுவ மகாவித்தியாலயத்தில் கற்றார்.

1956 ஆம் ஆண்டு ருவான்வெல்ல தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.தே.க வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆதரவாளராக இவர் அரசியலில் பிரவேசித்தார். பின்னர் மிக நீண்ட காலமாக அமைச்சரும் சப்ரகமுவ மாகாண ஆளுநருமாகவிருந்த பி.சீ இம்புலானவின் அந்தரங்கச் செயலாளராகவும் செயற்பட்டு வந்தார்.

1964 ஆம் ஆண்டு மெகொடபொதபத்துவை கிராம சபைத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை ஆரம்பித்த பாரூக் பிற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர், போக்குவரத்து சபை தலைவர், ஜேர்மன் பயிற்சி கல்லூரியின் தலைவர் என பல பதவிகளை வகித்தார்.

யூ.எல்.எம் பாரூக் ஆற்றிய சேவைகள் இன்றும் மக்களால் நினைவு கூரப்படுகின்றன.அமைதியான போக்கு, பொறுமை, பல்துறை சார் அனுபவ அறிவு, அர்ப்பணிப்பு, நிதானம், தலைமைத்துவப் பண்புகள், போன்றன இவரிடம் இருந்த சிறப்புகள் ஆகும்.

பி.சீ இம்புலான ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ருவன்வெல்லை தொகுதி ஐ.தே.கட்சியின் வெற்றிடமான பிரதிநிதித்துவத்திற்கு பெரும்பான்மை வேட்பாளருக்கு மத்தியில் ஒரேயொரு சிறுபான்மை வேட்பாளராக போட்டியிட்டார். வாக்களித்தவர்களில் 90% மேற்பட்ட பெரும்பான்மை மக்கள் அன்று தங்களுடைய பிரதிநிதியாக சிறுபான்மை இனத்தவரான யூ.எல்.எம் பாரூக்கை தெரிவு செய்தனர். 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி தனது 47வது பிறந்த தினத்தன்று கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை வெற்றி கொண்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். பின்னர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாரூக்கினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் நவீன போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியிலும் பாரியதொரு செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். மீண்டும் 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலையும் வெற்றி கொண்டார். மக்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் செவிசாய்த்து மக்களின் பிரச்சினைகளை தேசிய மட்டத்துக்கு கொண்டு சென்று அவற்றிற்குத் தீர்வு காண்பதில் முனைப்புடன் செயற்பட்டார். 2000-/2002 ஆட்சிக் காலத்தில் இ.போ.ச.தலைவராகவும் பணி புரிந்தார்.

அரசியலில் என்றுமே எதிரிகளைக் கொண்டிருக்காத அவர், பிரதிவாதிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பவராக விளங்கினார். குறிப்பாக மூவின மக்களுக்கு இடையில் இன நல்லுறவை கட்டியெழுப்ப பாடுபட்டார்.

சிறந்த பேச்சாற்றல் மிகுந்த அவர், எதிர்த் தரப்பினரும் போற்றும் அளவுக்கு வாதத் திறமை மிக்கவராக விளங்கினார். தனக்கு பாதகமான சந்தர்ப்பங்களிலும் கூட உண்மைக்காக குரல் கொடுத்தார். அரசியல் பயணம் பலருக்கும் முன்னுதாரணமாகும்.

- சில்மியா யூசுப்


Add new comment

Or log in with...