ஒருபோதும் நான் அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டேன் | தினகரன்

ஒருபோதும் நான் அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டேன்

அரசாங்கத்தை விட்டு விட்டு நான் ஒரு போதும் செல்ல மாட்டேன். எனினும் அரசாங்கம் என்னை கைவிட்டு விட்டு செல்லுமோ தெரியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தில் உங்களுக்கு தொடர்ந்து இருக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினர்.அதற்கு பதிலளித்த போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவரும் குழப்பத்திற்குள்ளாகி அவசரமான ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. தற்போதைய அரசாங்கம் ஆரோக்கியமாக முன்னோக்கி பயணிக்கும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் தொடர்ந்தும் பொறுமை காப்பீர்களா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஏன் நான் பொறுமை காக்கக் கூடாதா? என்ற பதிலையே அமைச்சர் வழங்கினார்.

பின்வரிசை எம்.பி க்கள் உங்களை தாக்குகிறார்கள்?

நான் அவர்களை ஏச மாட்டேன், ஏனென்றால் அவர்களை யாரோ செயற்படுத்துகிறார்கள். அவ்வாறு செயற்படுபவரே அந்த எம்.பிக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றார்கள்.

தேசிய வளங்களை விற்பதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலா அவ்வாறு நடந்து கொள்கின்றனர்?

பெரும்பாலும் அதுதான். நான் அரசியலில் காலடி எடுத்து வைத்த தினத்திலிருந்தே அதை செய்கின்றேன் என்று அமைச்சர் பதிலளித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...