டெஸ்ட் போட்டிகளிலிருந்து பெப் டு ப்ளெசிஸ் ஓய்வு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பெப் டு ப்ளெசிஸ், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக தன்னுடைய இன்ஸ்ராக்ராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதேநேரம், பாகிஸ்தான் தொடருக்கு பின்னர், தென்னாபிரிக்க அணியின் போட்டி அட்டவணையில் டெஸ்ட் தொடர்கள் அருகில் இல்லை. இந்தநிலையில், தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கவுள்ளதாக பெப் டு ப்ளெசிஸ் தெரிவித்துள்ளார்.

“இது நம் அனைவருக்கும் நெருப்பில் சுத்திகரிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. ஆனால் அவை பல விடயங்களில் எனக்கு தெளிவைக் கொண்டு வந்தன. என் இதயம் தெளிவாக உள்ளது. மேலும் ஒரு புதிய அத்தியாயத்திற்குள் செல்ல வேண்டிய நேரம். அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியதை பெருமையாக நினைக்கிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கு சரியான தருணம் இதுவென நினைக்கிறேன்” என டு ப்ளெசிஸ் ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். பெப் டு ப்ளெசிஸ் தென்னாபிரிக்க அணிக்காக கடந்த 2012ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகியிருந்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் பெற்றுக்கொண்ட இவர், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் சதமடித்து அணியின் தோல்வியை தவிர்த்து, போட்டியை சமப்படுத்தினார்.

“தென்னாபிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன். அணியின் தலைவராக செயற்படுவேன் என 15 வருடங்களுக்கு முன்னர் யாரும் கூறியிருந்தால் நான் அதனை நம்பியிருக்க மாட்டேன்” எனவும் டு ப்ளெசிஸ் குறிப்பிட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தாலும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக டு ப்ளெசிஸ் தெரிவித்தார். அத்துடன், இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போதைய நிலை காரணமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடர்கள் உள்ளன. அதனால், எனது கவனம் 20 க்கு 20 போட்டிகளுக்கு மாறுகிறது. மேலும் உலகளாவிய ரீதியில் முடிந்தவரை விளையாட விரும்புகிறேன். 20 க்கு 20 போட்டிகளில், தென்னாபிரிக்க அணிக்கு பலத்தை வழங்க முடியும் என நினைக்கிறேன்.


Add new comment

Or log in with...